
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா அரைசதம் அடித்தனர்.
பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவர் எடுத்த இந்த 3 விக்கட்டுகளின் மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக மிக முக்கியமான சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். இந்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இதுவரை சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருந்த பும்ராவை (33 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி தற்போது அர்ஷ்தீப் சிங் (35 விக்கெட்டுகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க : கடைசி 2 மேட்ச் நான் நெனச்சது நடக்கல.. ஆனா இப்போ நடந்ததில் சந்தோசம் – ஆட்டநாயகன் பாண்டியா பேச்சு
இந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறயிருக்கும் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.