இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாக ஜொலித்து வருகிறது. ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்து வந்த ட்ரீம்11 நிறுவனம் விலகுவதாக அறிவித்தது.
சமீபத்தில் இணையத்தில் பணம் செலுத்தி விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதிப்பதாக அறிவித்த இந்திய அரசாங்கம் அதற்கான மசோதாவையும் நிறைவேற்றியது. அதனால் ரசிகர்களின் பணத்தில் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து வந்த ட்ரீம் 11 தங்களுடைய நிறுவனத்தை மூடுவதாக அறிவித்தது. அதன் காரணமாக தற்காலிகமாக ஆசியக் கோப்பையில் ஸ்பான்சர் இல்லாமல் இந்திய அணி விளையாடி விளையாடி வருகிறது.
புதிய ஸ்பான்சர்:
அதே போல இந்திய மகளிரணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அவ்விரு இந்திய அணிகளும் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக பிரபலமான அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அப்போலோ டயர்ஸ் நிறுவனம் இரு சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்து விற்று வருகிறது. அந்தத் துறையில் இந்தியளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அப்போலோ தற்போது இந்திய அணிக்கு ஸ்பான்சராக முன்வந்துள்ளது.
போட்டிக்கு 4.5 கோடி:
வரும் 2027 வரை 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள அந்நிறுவனம் 2027 உலகக் கோப்பை வரை இந்தியாவின் ஜெர்சி ஸ்பான்சராக செயல்பட உள்ளது. அந்தக் காலங்களில் 121 இருதரப்பு தொடர்கள், 27 ஐசிசி போட்டிகள் அடங்கும். இதற்காக 579 கோடிகள் என்ற பெரிய தொகையை பிசிசிஐக்கு அப்போலோ டயர்ஸ் நிறுவனம் செலுத்த உள்ளது. குறிப்பாக இந்திய அணி விளையாடப் போகும் ஒரு போட்டிக்கு சராசரியாக 4.5 கோடிகளை அப்போலோ நிர்வாகம் செலுத்த உள்ளது
இதையும் படிங்க: தோல்வியாளர் இந்தியா.. சாம்பியன் பாகிஸ்தானின் போலி முகத்தை கிழித்த பாண்டிங்.. நடந்தது என்ன?
இது முன்பிருந்த ட்ரீம் லெவன் செலுத்திய 4 கோடி ரூபாய் தொகையை விட அதிகமாகும். சமீபத்தில் இந்திய அரசாங்கம் நிறைவேற்றிய மசோதாவால் புகையிலை, சூதாட்டம் சம்பந்தமான நிறுவனங்கள் ஸ்பான்ஸராக வர முடியாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் படி தற்போது புகையிலை மற்றும் சூதாட்ட நிறுவனங்களை தேர்ந்தெடுக்காத பிசிசிஐ இந்திய அணியின் ஸ்பான்சராக டயர் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.



