சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் பந்துவீச்சாளராக ஒரு மோசமான சாதனையை நேற்று நடைபெற்ற தங்களது கடைசி லீக் ஆட்டத்தின் போது நிகழ்த்தி இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அந்த வகையில் நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற குஜராத் மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி அசத்தியது.
அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை :
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவிக்க அடுத்ததாக 230 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 140 ரன்களுக்கு சுருண்டதால் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. அதேவேளையில் சி.எஸ்.கே அணி ஏழாம் இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சென்னை அணி சார்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்கள் வீசி 56 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார். இந்த தொடரின் முதல் 9 போட்டிகளில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இந்த தொடரின் பிற்பாதியில் தான் விளையாடிய 5 போட்டிகளிலுமே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.
அதிலும் குறிப்பாக கடைசி 5 போட்டிகளில் அவர் ஒரு போட்டிக்கு குறைந்தது 65 ரன்கள் வீதம் விட்டுக் கொடுத்தது ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியுடன் சேர்த்து அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ரஷீத் கானின் ஒரு மாபெரும் மோசமான சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு வந்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளராக ரஷீத் கான் 33 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்து முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : அடுத்த 2027 ஆம் ஆண்டு தோனியை சி.எஸ்.கே அணியில் பார்க்க முடியுமா? – ருதுராஜ் அளித்த பதில்
கடந்த 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ரஷீத் கான் 33 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்திருந்தார். இவ்வேளையில் நேற்றைய போட்டியில் நிறைய சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த அன்ஷுல் கம்போஜ் 34 சிக்ஸர்களை ஒரு சீசனில் விட்டுக்கொடுத்து ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை வழங்கிய மோசமான பவுலர் என்ற சாதனையை தன் வசமாக்கியுள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து முகமது சிராஜ் 31 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹசரங்கா, சாஹல் மற்றும் ரபாடா ஆகியோர் 30 சிக்சர்களை விட்டுக்கொடுத்து நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



