இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஜூலை 23ஆம் தேதி ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையின் 4வது போட்டி துவங்குகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே 4வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
ஆனால் அந்தப் போட்டிக்கு முன்பாக ஆகாஷ் தீப், நித்திஷ் ரெட்டி, அர்ஷ்தீப் ஆகியோர் அடுத்தடுத்து காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதன் காரணமாக 3வது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா அல்லது அன்சுல் கம்போஜ் ஆகியோரை விளையாட வைக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே சுமாராக பவுலிங் செய்த கிருஷ்ணாவுக்கு பதிலாக கம்போஜை விளையாட வைக்க வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ஜஹீர் கான் மாதிரி:
அதற்கான முக்கிய காரணங்களை அவர் விவரித்தது பின்வருமாறு. “பும்ரா, சிராஜ் இருக்கும் நிலையில் பிளேயிங் லெவனில் கம்போஜை கொண்டு வந்தால் அது மிகவும் சிறந்த பவுலிங் அட்டாக்காக மாறும் என்று நான் சொல்வேன். மக்கள் அவர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்தில் விளையாடியுள்ளார்”
“உள்ளூர் கிரிக்கெட்டில் சுமார் 13 என்ற சராசரியை கொண்டுள்ள அவர் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். துலீப் கோப்பையில் அவர் அற்புதமாக விளையாடினார். இங்கிலாந்தில் தேவைப்படக்கூடிய நீண்ட ஸ்பெல்லை வீசும் திறமை கொண்ட அவர் பும்ரா, சிராஜ்க்கு நல்ல உதவியாக இருப்பார். பிரசித் கிருஷ்ணாவும் ஆப்ஷனாக இருக்கிறார்”
அஸ்வின் ஆதரவு:
“ஆனால் கட்டுப்பாட்டை கொடுத்து பேட்டிங்கில் கணிசமான ரன்கள் எடுக்கக்கூடிய அன்சுலை நான் தேர்ந்தெடுப்பேன். அவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கிரிக்கெட் அணியிலும் பார்த்துள்ளேன். சிறந்த மணிக்கட்டு பொசிஷனை வைத்துள்ள அவருடைய பந்துகள் நேராக செல்லும். 30 – 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் தங்களுடைய திட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் நிறைய பவுலர்களை பார்த்துள்ளேன்”
இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டியில் புதிய வீரர் அறிமுகம் ஆவதை உறுதிசெய்த கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ
“ஆனால் கம்போஜ் தனது திட்டத்தைப் புரிந்து பவுலிங் செய்வது பாராட்டுக்குரியதாக இருக்கும். அவருக்கு தம்முடைய திட்டத்தைப் புரிந்து அதை களத்தில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது தெரியும். அது பல வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருக்கும் பண்பல்ல. ஜாகீர் கான் அது போன்ற அற்புதமான பவுலர். பும்ரா இன்னொருவர். பும்ரா திட்டங்களை வகுத்து புரிந்து கொண்டு அவற்றை முழுமையாகச் செயல்படுத்துகிறார். கம்போஜ் அந்த வகையைச் சேர்ந்தவர்” என்று கூறினார்.



