இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல்வேறு இந்திய அணி வீரர்கள் காயத்தைச் சந்தித்துள்ள வேளையில் நாளைய நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பதே பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
அறிமுகமாகும் புதிய வீரர் : உறுதிசெய்த சுப்மன் கில்
இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு ஆகாஷ் தீப் இன்னும் முழுவதுமாக தயாராகவில்லை.
அதன் காரணமாக அவர் இந்த நான்காவது போட்டியில் விளையாட மாட்டார். அதேபோன்று அர்ஷ்தீப் சிங்கும் காயமடைந்துள்ளதால் அவராலும் விளையாட முடியாது. இருந்தாலும் நமது அணியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அன்சுல் கம்போஜ் தனது அறிமுக வாய்ப்பை நெருங்கியுள்ளார். இருந்தாலும் நாளை பிரசித் கிருஷ்ணா மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகிய இருவரில் யார்? என்பதை சூழ்நிலையை வைத்து முடிவு செய்வோம்.
இருந்தாலும் அன்ஷுல் கம்போஜ் பயிற்சியின் போது சிறப்பாக பந்துவீசியிருந்தார். அவரை மிகச் சிறந்த திறமை உடையவராக நான் பார்க்கிறேன். அவரால் நிச்சயம் நமது அணிக்கு வெற்றியை பெற்று தரமுடியும். நிதீஷ் ரெட்டி காயம் அடைந்துள்ளதால் அவரும் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். நமது அணியில் பல பந்துவீச்சாளர்கள் காயத்தை சந்தித்துள்ளனர்.
இருப்பினும் நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்தும் அளவிற்கு நம்மிடம் தகுதியான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் என்றும் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நாளைய நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 146 ரன்கள் போதும்.. கிரஹாம் கூச்சின் 35 வருட சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – சுப்மன் கில்
ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள வேளையில் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்று கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



