
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் எதிர்பார்த்ததைப் போலவே 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. குறிப்பாக முதல் போட்டியில் 10 ஓவருக்குள் சேசிங் செய்த ஆஸ்திரேலியா அதிரடியான வெற்றியுடன் சாதனை படைத்தது. அதனால் 3 – 0 என்ற கணக்கில் எளிதாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
மறுபுறம் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியை நெருங்கியும் கடைசியில் சொதப்பி தோற்றது. அதனால் சொந்த மண்ணில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்த இருதரப்பு தொடரில் ஸ்காட்லாந்து ஒரு வெற்றியாவது பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியில் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஒய்ட்வாஷ் தோல்வியே கிடைத்தது.
முன்னதாக அந்தத் தொடரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்கப்பட்ட வெற்றிக் கோப்பை தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கையால் முழுமையாக பிடிக்க முடியாத அளவுக்கு அந்த கோப்பை மிகவும் சிறியதாக இருக்கிறது. சொல்லப்போனால் அனைவரது வீட்டில் இருக்கும் சிறிய பாத்திரத்தை போன்ற கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்காட்லாந்து வாரியம் பரிசாக கொடுத்தது.
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் இதை எப்படி பிடிப்பது? என்று சிரிப்பை வெளிப்படுத்தினார். அந்த வகையில் சிரித்துக்கொண்டு அந்தக் கோப்பையை ஒற்றை விரலால் பிடித்த அவர் அதை தம்முடைய அணி வீரர்களிடம் எடுத்துச் சென்றார். அதைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் இது என்ன இவ்வளவு பெரிய கோப்பை? என்று சிரிப்பை வெளிப்படுத்தினர்.
இறுதியில் அந்தக் கோப்பையை பிடிக்க முடியாமல் பிடித்துக் கொண்டே ஆஸ்திரேலிய வீரர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதைப் பார்த்த ரசிகர்கள் ஐஸ்கிரீம் கோப்பை கூட இதை விட பெரிதாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஸ்காட்லாந்தை கிண்டலடிக்கின்றனர். அத்துடன் ஆஸ்திரேலியா 5 உலகக் கோப்பைகள், 1 டி20 உலகக் கோப்பை, 1 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2 சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற ஏராளமான கோப்பைகளை வென்றுள்ளது.
இதையும் படிங்க: 58 ரன்ஸ்.. வங்கதேச தொடரில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை உடைக்க உள்ள விராட் கோலி
ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு கோப்பையை கொடுத்து நன்றாக அவமானப்படுத்தி விட்டீர்கள் என்றும் ஸ்காட்லாந்தை ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடும் டி20 தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி துவங்குகிறது.