இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல பேட்டிங் வரிசையில் விராட் கோலி விளையாடிய 4வது இடத்தில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
அந்த இடத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 4வது இடத்தில் விளையாடிய விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார். தற்போது அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் கேஎல் ராகுல், கருண் நாயர், தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் 4வது இடத்தில் விளையாடுவதற்கான போட்டிக்கு வந்துள்ளனர்.
தகுதியான கருண் நாயர்:
இந்நிலையில் சாய் சுதர்சன் ஐபிஎல் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தியுள்ளதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ஆனால் கருண் நாயர் ரஞ்சிக்கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் கவுன்டி தொடரிலும் அசத்தியதாக கும்ப்ளே கூறியுள்ளார். எனவே அவர் தான் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு.
“4வது இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இது போன்ற சூழ்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய கருண் நாயர் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பதற்கான தகுதியுடையவர். எனவே அவர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு சரியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் உங்களுக்கு அனுபவம் தேவை”
கும்ப்ளே கருத்து:
“உங்களுக்கு இங்கிலாந்தில் ஏற்கனவே விளையாடியவர் தேவை. கருண் நாயர் கவுன்டி தொடரில் விளையாடியுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகள் அவருக்குத் தெரியும். தற்போது 30 வயதைத் தாண்டியிருந்தாலும் இப்போதும் அவர் ஓரளவு இளமையாக இருக்கிறார். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அது உள்ளூர் கிரிக்கெட்டில் போராடும் நிறைய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: வெறும் 24 சான்ஸ்.. சச்சினின் 100 சதங்கள் உலக சாதனையை தவற விடும் கிங் கோலி? புள்ளிவிவர அலசல்
“சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களும் போட்டிக்கு உள்ளனர். அவரைப் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர். அது போன்ற மக்கள் டி20, ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கக்கூடாது என்று நம்புகிறேன். உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.



