
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரர்களை தவிர்த்து ஐபிஎல் தொடரில் அசத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்களான பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் போன்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை அசத்தலாக கைப்பற்றிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணிலும் டி20 தொடரை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான துவக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கடைசியாக நடைபெற்ற முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இருந்தாலும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே இந்திய அணியை எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
சஞ்சு சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடக்கூடியவர். ஆனால் இந்த தொடரின் நான்கு போட்டிகளிலும் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்று பார்ப்பதை ஆவலாக இருக்கிறேன். ஏனெனில் அதிரடியாக விளையாட விரும்பும் அவர் விக்கெட்டை எளிதாக இழக்க கூடியவர்.
இதையும் படிங்க : இந்திய அணி ஆஸியில் ஜெய்க்க அவர் தேவை.. காரணம் இது தான்.. சீக்கிரம் டீம்ல சேருங்க.. உத்தப்பா கருத்து
எனவே இந்த தென்னாப்பிரிக்க தொடரானது அவருக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் என 594 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.