இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய கேரியரின் கடைசிக் காலங்களில் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றியுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர்கள் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் விடை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர்கள் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். கடைசியாக 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சராசரியாக 37 வயதாகும் விராட் கோலி, ரோஹித் சர்மா தங்களுடைய ஃபிட்னஸை இப்படியே மெயின்டன் செய்து 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கஷ்டம் தான்:
எனவே அவர்கள் விளையாடும் வரை கொண்டாடப்பட வேண்டிய வீரர்கள் என்று தெரிவிக்கும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “அடுத்ததாக 6 மாதங்கள் கழித்து நடைபெற உள்ள ஒருநாள் போட்டிகளுக்கு அவர்கள் தயாராவது எளிதாக இருக்காது. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுடைய கேரியரில் எவ்வளவு சாதித்திருந்தாலும் அது பெரிய சவாலாக இருக்கும்”
“ஆனால் அவர்கள் சாம்பியன் வீரர்கள். எனவே அவர்களுக்கு அந்த சவாலை எப்படி சமாளிப்பது என்று தெரியும். அந்த சாம்பியன் பிளேயர்கள் விளையாடும் வரை கொண்டாடுவது முக்கியம். அந்த 2 வீரர்களும் களத்திற்கு சென்று விளையாடுவதை நாம் கொண்டாட வேண்டும். அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார்கள்”
அதுவரை கொண்டாடுங்க:
“ஏனெனில் அந்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதைப் பார்த்தோம். குறிப்பிட்ட 2 ஃபார்மட்டில் விளையாடாத ஜாம்பவான்கள் எஞ்சியிருக்கும் ஒரு ஃபார்மட்டில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவார்கள். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது”
இதையும்படிங்க: சுதர்சனுக்கு இங்கிலாந்தில் சான்ஸ் தராதீங்க.. இந்த பலவீனத்தை நேர்ல பாத்துருக்கேன்.. குழி பறிக்கும் தமிழ்நாடு கோச்
“அங்கே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக தாக்கத்தை ஏற்படுத்துவதை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த இருவரும் ஓய்வு பெற்ற சூழ்நிலையில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இங்கிலாந்தில் கவனிக்கத்தக்கவர்களாக இருக்கிறார்கள்” எனக் கூறினார். இதை அடுத்து இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது.



