
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. மே 31-ஆம் தேதி அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி அசத்தலான வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது.
இந்த தொடரில் ஆர்.சி.பி அணியின் அட்டகாசமான செயல்பாடு பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலுமே ஆர்.சி.பி அணியிடமிருந்து சிறப்பான செயல்பாடு வெளிவந்திருந்தது. குறிப்பாக பந்துவீச்சு துறையில் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி மிக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அதோடு குஜராத் அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாகவும் திகழ்ந்தார்.
இவ்வேளையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு புவனேஷ்வர் குமாரின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து தனது பாராட்டினை தெரிவித்துள்ள ஆர்.சி.பி அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர் கூறுகையில் : புவனேஷ்வர் குமார் கடந்த 2025 ஆம் ஆண்டும் சரி, இந்த 2026 ஆம் ஆண்டு சரி ஆர்.சி.பி அணிக்காக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அழுத்தமான வேளைகளில் வந்து எங்களது அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தந்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த 2026 ஐ.பி.எல் சீசனில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி
கடந்த இரண்டு சீசன்களாகவே அவர் துவக்க ஓவர்களில் பந்து வீசினாலும் சரி, கடைசி கட்ட நேரத்தில் பந்து வீசினாலும் சரி ரன்களை பெரிய அளவில் கொடுக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலராக திகழ்ந்துள்ளார். அவரது பந்துவீச்சு எங்களது அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்ததாகவும் ஆண்டி பிளவர் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.