
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் தன்னை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக அடையாளப்படுத்தினார். அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டிக்கு மேல் வாய்ப்பை பெறாத அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் புகழ்பெற்றார்.
2012, 2016 டி20 உலகக் கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு உதவிய அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக நீண்ட காலம் விளையாடி வருகிறார். தற்போது 37 வயதை கடந்து விட்ட அவர் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தங்களுக்கு சொந்த மண்ணில் டி20 தொடரில் விளையாட உள்ளது.
அந்தத் தொடரில் தங்களுடைய சொந்த ஊரான ஜமைக்காவில் நடைபெற உள்ள முதல் 2 போட்டிகளில் விளையாடிய கையுடன் ரசல் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் 2016 டி20 உலகக் கோப்பையில் மும்பையில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவை தோற்கடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவியதே தம்முடைய கேரியரின் பெரிய சாதனை என்று ரசல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.
“கண்டிப்பாக 2016 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது என்னுடைய சிறந்த தருணமாகும். அந்தப் போட்டியில் எங்களுடைய மற்ற பேட்ஸ்மன்களுடன் சேர்ந்து நானும் சிம்மென்சும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தோம். அப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 190+ ரன்களை துரத்தினோம். அங்கே ரசிகர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்தார்கள்”
“அதுவே எங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. ஆனால் பிட்ச் நன்றாக இருந்ததும், எங்களுக்கு பின் பேட்ஸ்மேன்கள் பெவிலியனில் காத்திருந்ததும் எனக்கு சுதந்திரமாக விளையாடுவதற்கான தன்னம்பிக்கையையும் வாய்ப்பையும் கொடுத்தது” என்று கூறினார். மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 193 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசல் 43 (20) ரன்கள் விளாசி இந்தியாவை வீழ்த்த உதவினார்.
இதையும் படிங்க: இன்னும் 101 ரன்கள் அடிச்சா போதும்.. இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரிஷப் பண்ட்
அதனால் இந்தியாவை செமி ஃபைனலில் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்ததாக 2026 டி20 உலகக் கோப்பையும் இந்தியாவில் நடைபெறும் உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக ரசல் ஓய்வு பெற்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.