- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் சாதனை நைட்வாட்ச்மேன்.. ஹாட்ரிக் நாயகன் அமித் மிஸ்ரா ஓய்வு.. உருக்கமான அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த அவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2008ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்த 6வது இந்திய வீரராக சாதனை படைத்தார்.

ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஓய்வுக்குப் பின் நிலையான வாய்ப்புகளைப் பெற்ற அவர் 22 போட்டிகளில் 76 விக்கெட்டுகள் எடுத்தார். 2011 ஓவல் டெஸ்ட் போட்டியில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய மிஸ்ரா 84 ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்தியன் நைட் வாட்ச்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

25 வருட பயணம்:

2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் அங்கமாக இருந்த மிஸ்ரா சாம்பியன் பட்டம் வென்றார். 2014 டி20 உலக கோப்பையில் 10 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். நாளைடைவில் ஃபிளாட்டான பிட்ச்களில் தடுமாற்றமாக பவுலிங் செய்த அவருக்கு போட்டியாக அஸ்வின் மற்றும் ஜடேஜா வந்தார்கள்.

அதனால் கடைசியாக 2017ஆம் ஆண்டு விளையாடியதுடன் இந்திய அணியிலிருந்து அவர் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதே சமயம் ஐபிஎல் தொடரில் 162 போட்டிகளில் 174 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த ஒரே பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். சமீப காலங்களில் காயத்தால் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறிய அவர் தற்போது 42 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

விடை பெற்ற மிஸ்ரா:

22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள மிஸ்ரா முறையே 76, 64, 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் ஓரளவு வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் ஓய்வு பற்றி உருக்கத்துடன் கூறியுள்ளது பின்வருமாறு. “பிசிசிஐ மற்றும் ஹரியானா வாரியத்துக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பைக்கான பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் இடம்பிடிக்க மாட்டார்.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா

“என்னுடைய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் உட்பட எனது பயணத்தில் அன்பையும் ஆதரவையும் கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இந்த 25 வருடம் என்னுடைய வாழ்வில் நினைவு கொள்ளக்கூடியதாக இருந்தது. அது எனக்கு நிறைய பாடங்கள் மற்றும் பொக்கிஷமாக வைத்துக்கொள்ள நிறைய நினைவுகளையும் கொடுத்தது” என்று கூறியுள்ளார். அவருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -