
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று கோப்பையை முத்தமிட்டது. ஆனால் அத்தொடரில் கேப்டன் சுப்மன் கில் சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
ஏனெனில் உள்ளூர் முதல் ஐபிஎல் வரை துவக்க வீரராகவே விளையாடிய அனுபவத்தை கொண்ட அபிஷேக் சர்மா இத்தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியில் டக் அவுட்டானார். ஆனால் 2வது போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் தான் உண்மையில் இந்தியா கம்பேக் கொடுக்க உதவினார். இருப்பினும் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் வந்ததால் பெருந்தன்மையாக தனது ஓப்பனிங் இடத்தை அவருக்கு கொடுக்காத கேப்டன் கில் தாமே ஓப்பனிங்கில் விளையாடினார்.
கில் எதற்கு:
அதே போல 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கினார். ஆனால் அவரை சதமடிக்க விடாத சுப்மன் கில் தம்முடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மறுபுறம் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக தங்கப்பதக்கம் வென்ற ருதுராஜ் சிஎஸ்கே கேப்டனாகவும் நன்றாக செயல்படுவதாக மிஸ்ரா கூறியுள்ளார். எனவே அவரை ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமித்திருக்கலாம் என்று தெரிவிக்கும் மிஸ்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் கில் எனக்கு பிடிக்காதவர் கிடையாது. ஆனால் அவரை விட கெய்க்வாட் சிறந்த வீரர்”
“ஏனெனில் அவர் சிஎஸ்கே மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நன்றாக செயல்பட்டார். அதனால் அவர் டி20 உலகக்கோப்பை அணியிலும் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அமைதியாக இருக்கக் கூடிய அவர் முழுமையான வீரர்”
இதையும் படிங்க: ஃபைனலில் 30 பந்தில் 30 ரன்ஸ்.. என்ன செய்றதுன்னே தெரியல.. அப்போ தான் இதை செஞ்சோம்.. ரோஹித் பேட்டி
“அதே போல அவர் தேவையில்லாமல் ரிஸ்க் ஷாட்டை அடிக்க மாட்டார். அவரால் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியும். எனவே அவரை கேப்டனாக நியமித்திருந்தால் இன்னும் அனுபவத்தை பெற்றிருப்பார். அது போக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற இன்னும் அனுபவம் கொண்ட வீரர்களும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தேர்வாளர்கள் ரோகித் சர்மாவுக்கு மாற்றாக கில்லை தேடுகிறார்கள்” என்று கூறினார்.