அவங்கள மட்டுமே வெச்சுகிட்டு ஜெயிச்சுட முடியுமா? – உலகக்கோப்பை தோல்வி பற்றி அமித் மிஸ்ரா ஆதங்கம்

Amit Mishra
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கான வேலைகளை துவங்கியுள்ளது. முன்னதாக ஒரு காலத்தில் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா என முதன்மை பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பகுதி நேர பந்து வீச்சாளர்களாக மாறி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் தற்போதைய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதை செய்ய தவறுவதே சமீப காலங்களில் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமென்று அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.

எனவே வாஷிங்டன் சுந்தர் போன்ற பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய வீரர்களை இந்திய அதிகம் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கேட்டுக் கொண்டார். மேலும் ஏதேனும் துறையில் சொதப்பினாலும் மற்றொரு துறையில் அசத்தலாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றக்கூடியவர்களாக திகழும் ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் அணியின் விலை மதிப்பு மிக்க வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

- Advertisement -

திருந்த மாட்டீங்க:
அதனாலேயே இப்போதெல்லாம் 7 – 10 வரை விளையாடும் டெயில் எண்டர்கள் கூட ஓரளவு அதிரடியாக ரன்களை குவிக்க தெரிந்திருந்தால் மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் ஆல்-ரவுண்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு போட்டியை வென்று விட முடியுமா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது 300 – 400 என எவ்வளவு ரன்களை நீங்கள் அடித்தாலும் எதிரணியின் விக்கெட்டுகளை எடுத்தால் தானே வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கும் அவர் அதற்கு சுழல் பந்து வீச்சாளர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட் எடுப்பவர்களாக திகழும் லெக் அல்லது மணிக்கட்டு ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

Chahal and Ashwin

குறிப்பாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் அஷ்வின் ஓரளவு பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதற்காக சஹால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டதை போன்ற அணித்தேர்வு தோல்வியை மட்டுமே பரிசளிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை இந்த பிரச்சனையை நான் எழுப்பினேன். ஆனால் அனைவரும் என்னை அமைதியாக்கி விட்டார்கள். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பேட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலை வைத்து தேர்வு செய்யக் கூடாது.

- Advertisement -

இந்தியாவில் எத்தனை ஆல் ரவுண்டர்கள் உள்ளனர்? நீங்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார்கள் என்று சொல்லலாம்”. “அஷ்வின், அக்சர் படேல் ஆகியோரும் பேட்டிங் செய்வார்கள். இந்த வகையில் உங்களுக்கு எத்தனை ஆல் ரவுண்டர்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 2 ஆல்-ரவுண்டர்கள் போக பகுதி நேர பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அதே சமயம் உங்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க லெக் ஸ்பின்னர்கள் தேவைப்படுகிறது.

ஏனெனில் பவுலர்கள் தான் உங்களுக்கு போட்டியை வென்று கொடுப்பார்கள். அவர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் உங்களால் எப்படி போட்டியை வெல்ல முடியும்? நீங்கள் 300 ரன்கள் அடித்தால் கூட உங்களது முதன்மை பவுலர்கள் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றால் எப்படி போட்டியை வெல்ல முடியும் (எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிரான 2022 உலகக்கோப்பை போட்டி). உலக கோப்பையில் சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

- Advertisement -

“அவருக்கு குறைந்தது ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அதற்காக அவருக்கு நேரடியாக நாக் அவுட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. முன்கூட்டியே அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்முக்கு திரும்புவதற்கான சூழ்நிலையை கொடுத்திருக்க வேண்டும். அவரைப் போன்ற ஒருவர் விளையாடுவது மிகவும் அவசியமாகும்”

இதையும் படிங்க: வீடியோ : எதிரணி வீரர் என்று கூட பாராமல் பங்களாதேஷ் அணி வீரருக்கும் பேட்டிங் ஆலோசனை வழங்கும் டிராவிட்

“ஏனெனில் லெக் ஸ்பின்னர்கள் அல்லது மணிக்கட்டு ஸ்பின்னர்கள் மட்டுமே உங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர்கள் தான் அதிக விக்கெட்களை எடுத்துள்ளார்கள். ஒருவேளை சஹால் விளையாடியிருந்தால் 3/40 என்ற அளவில் பந்து வீசியிருப்பார். அது நமது அணுகு முறையை மாற்றியிருக்கும்” என்று கூறினார்.

Advertisement