ஐபிஎல் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 43 வயதில் தோனி விளையாடி வருகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார். அதனால் சென்னையில் தோனி களமிறங்கும் போது மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் விசிலடித்து வெறித்தனமாக வரவேற்பது வழக்கமாகும்.
மேலும் அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்க மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அவுட்டாக வேண்டுமென்று சென்னை அணி ரசிகர்களே விரும்புவது வாடிக்கையாகும். இந்நிலையில் தோனி ஓய்வு பெற்றப் பின் சென்னை அணிக்கு இது போன்ற நிலைமையால் ஆப்பு காத்திருப்பதாக முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு எச்சரித்துள்ளார். எனவே தோனி தாமாக முன்வந்து ரசிகர்களின் மனநிலையை மாற்ற பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராயுடு எச்சரிக்கை:
இது பற்றி ராயுடு பேசியது பின்வருமாறு. “இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. அது கிரிக்கெட்டை சரியாக அழைத்துச் செல்லும் என்று எனக்குத் தோன்றவில்லை. புதிய வீரராக நீங்கள் சென்னை அணிக்குள் சென்றால் அது அச்சுறுத்தலாக இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனி ரசிகர்கள். பின்பு தான் சென்னை ரசிகர்கள். அவருக்கு சத்தமாக கொடுக்கப்படும் வரவேற்பு அற்புதமானது”
“அது சரியானதும் கூட. ஏனெனில் அவர் தான் பல வருடங்களாக சென்னை அணியை சரியாக கட்டமைத்தவர். தல என்ற பெயரில் அழைக்கப்படும் அவர் சென்னை அணியில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். சிஎஸ்கே அணிக்காக தோனி செய்துள்ள விஷயங்களுக்காக அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அற்புதமானது. இருப்பினும் சில வருடங்களாகவே தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக மற்ற பேட்ஸ்மேன்கள் அவுட்டாக வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் விரும்புகின்றனர்”
ஆப்பு காத்திருக்கு:
“சொல்லப்போனால் அவர்கள் அதை வெளிப்படையாகவே கேட்கிறார்கள். அதனால் ஏற்படும் வலியை சிஎஸ்கே அணிக்காக விளையாடும் நிறைய வீரர்கள் வெளியே சொல்ல விட்டாலும் மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். நாங்களும் தோனியை விரும்புகிறோம். ஆனால் இப்படி நடப்பது விளையாட்டை நன்றாக அழைத்துச் செல்லாது. ஏனெனில் மற்ற வீரர்களும் சிஎஸ்கே அணிக்காக நன்றாக செயல்பட நிறைய உழைப்பையும் தியாகத்தையும் செய்கின்றனர்”
இதையும் படிங்க: தார் ரோட்டில் 280 ரன்ஸ் அடிச்சாலும் கோப்பை ஜெய்க்க அவங்க மனசு வைக்கனும்.. ஹைதராபாத்தை சாடிய வாகன்
“கடைசியில் சொந்த ரசிகர்களே அவுட்டாக சொன்னால் அது நன்றாக இருக்காது. இது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் இந்த விஷயத்தை சரி செய்ய தோனி தான் சிறந்தவர். மற்ற வீரர்களும் நமது வீரர்கள் அவர்களுக்கும் ஆதரவு கொடுங்கள் என்று தோனி சொல்ல வேண்டும். அது மற்ற வீரர்களுக்கு நன்றாக அமையும். தோனியை வைத்து விடுமுறை அல்லாத நாட்களில் கூட சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஈர்க்கிறார்கள். மற்ற யாரையும் வைத்து பிராண்டிங் செய்வதில்லை. எப்போதாவது இது மீண்டும் வந்து உங்களை கடிக்கலாம். எனவே இவற்றை தவிர்க்க நீங்கள் ஏதாவது வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.



