லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையே நேற்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது இறுதி ஓவரின் போது 210 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது.
ரிஷப் பண்ட்டால் லக்னோ அணிக்கு ஆபத்து : அம்பத்தி ராயுடு
இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை சந்திக்க அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என்றும் அதேபோன்று பந்துவீச்சிலும் அவர்களிடம் சரியான பவுலர்கள் இல்லாததால் தோல்வியை சந்தித்து இருப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் நேற்றைய போட்டியின் போது லக்னோ அணியானது 13.4 ஓவர்களிலேயே 171 ரன்கள் குவித்திருந்த வேளையில் அடுத்த 6 ஓவர்களில் வெறும் 48 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுமட்டுமின்றி பந்துவீச்சின் போதும் முதல் 5 விக்கெட்டுகளை 65 ரன்களில் எடுத்தாலும் அடுத்த 3 விக்கெட்டுக்கு கிட்டத்தட்ட 140 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இப்படி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே அவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை சந்திக்க ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் செய்த சில தவறுகள் தான் காரணம் என்றும் அதனால் லக்னோ அணிக்கு தான் ஆபத்து என்றும் முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ரிஷப் பண்டின் ஷாட் செலக்ஷன் மிகவும் மோசமாக இருந்தது. அவர் களத்திற்கு வந்ததுமே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மிடில் ஓவர்களின் போது சரியான ஷாட் செலெக்ஷன் இருந்தால் தான் அதிரடியாக விளையாட முடியும். ஆனால் அவர் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச்சாளர்களையும் சரியான முறையில் சுழற்சியில் பயன்படுத்தவில்லை.
இதையும் படிங்க : எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றதே அந்த பையன் தான் – ரிஷப் பண்ட் வருத்தம்
தனது அணியை அவர் தவறாக வழிநடத்தியதாலே இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை சந்தித்ததாகவும் இனியும் அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங் மோசமாக அமைந்தால் லக்னோ அணி பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் அம்பத்தி ராயுடு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



