ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடந்த 2008 முதல் விளையாடி வரும் அந்த அணி அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்தது. குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2016 சீசனில் இறுதிப்போட்டி வரை சென்ற பெங்களூரு அணி தோல்வியைச் சந்தித்தது.
அதனால் விராட் கோலி இருக்கும் வரை ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்களுக்கு விமர்சனங்களும் எழுந்தன. அதன் காரணமாக 2021ஆம் ஆண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலிக்கு பின் டு ஃபிளேஸிஸ் தலைமையில் விளையாடியும் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடந்த சீசனில் ரஜத் படிதார் தலைமையில் ஒரு வழியாக ஆர்சிபி கோப்பையை வென்றது.
சிஎஸ்கே, மும்பை கஷ்டம்:
அதனால் காலம் காலமாக சந்தித்து வந்த கிண்டல்களுக்கு ஆர்சிபி அணி தக்க பதிலடி கொடுத்தது. அதே போல விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து முதல் கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் கோப்பைகளை வெல்ல எவ்வளவு போராடியிருக்கும் என்பதை இப்போது ஆர்சிபி ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் என அம்பாத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஒரு கோப்பையை வெல்ல 18 வருடங்கள் எடுத்துக்கொண்ட ஆர்சிபி அணி மும்பை, சென்னை போல 5 கோப்பைகளை வெல்ல 72 வருடங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் கலகலப்பான கணிப்பை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஃபிக்சிங் செய்து மும்பை, சென்னை அணிகள் கோப்பை வென்றதாக கிண்டலடித்த பெங்களூரு ரசிகர்கள் பற்றி ராயுடு பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி கோப்பையை வென்றது நல்ல உணர்வைக் கொடுத்தது”
72 வருடங்கள்:
“இப்போது ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை ஆர்சிபி தெரிந்திருப்பார்கள். 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்கு புரிந்திருக்கும். அதனுடைய அருமையை தற்போது அவர்கள் புரிந்திருப்பார்கள். ஒருமுறை வெல்வதே இவ்வளவு கடினம் என்றால் 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்”
இதையும் படிங்க: அந்த ரெஸ்ட் போதாதா? சிராஜை கழற்றி விட்ட இந்தியா அதை மிஸ் பண்ணிட்டாங்க.. ஹர்பஜன் விமர்சனம்
“தற்போது கோப்பையை வென்றதால் ஆர்சிபி அணியினர் அமைதியடைவார்கள். அவர்கள் 18 வருடங்களில் ஒரு கோப்பையை வென்றால், 5 கோப்பைகளை வெல்வதற்கு 72 வருடங்கள் தேவைப்படலாம். தற்போது வின்னர்ஸ் கிளப் பகுதிக்குள் வந்துள்ளதால் ஆர்சிபி ரசிகர்கள் அமைதியை சந்தித்திருப்பார்கள்” என்று மும்பை, சென்னை இரு அணிகளுக்காகவும் விளையாடி தலா 3 கோப்பைகளை வென்றுள்ள ராயுடு தெரிவித்தார்.



