ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் குஜராத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 243-5 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97*, சசாங் சிங் 44*, பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்கள் எடுத்தனர்.
குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் கடினமாக போராடியும் 232-5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 74, ஜோஸ் பட்லர் 54 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சுயநலமற்ற ஸ்ரேயாஸ்:
முன்னதாக பஞ்சாப் அணி இந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 என்ற வரலாற்றின் 2வது அதிகபட்ச தொகைக்கு வாங்கியது. கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் பஞ்சாப் அணியில் கேப்டன்ஷிப் பொறுப்பைப் பெற்ற அவர் தனது முதல் போட்டியிலேயே 97 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
குறிப்பாக 19வது ஓவரின் முடிவிலேயே 97 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் சதத்தை அடிப்பார் என்று நம்பப்பட்டது. அப்போது “என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அடி” என்று எதிர்ப்புறம் இருந்த சசாங் சிங்கிற்கு அவர் முதல் பந்திலேயே சிக்னல் கொடுத்து விட்டார். அதனால் சிராஜ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் சசாங் 23 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்கு வித்திட்டது.
ராயுடு பாராட்டு:
அந்த வகையில் தன்னுடைய சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ்க்கு கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியும் ஆட்டநாயகன் விருதும் பரிசாக கிடைத்துள்ளது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற சதத்தை மையப்படுத்தி விளையாடக்கூடிய மும்பை பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் அணியின் நலனைக் கருதி ஸ்ரேயாஸ் சதத்தை தவற விட்டது ஆச்சரியமளிப்பதாக அம்பாத்தி ராயுடு பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: மும்பை வீரராக இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் இப்படி செய்தது ஆச்சரியமாக இருந்தது – அம்பத்தி ராயுடு பேட்டி
“பாம்பே (மும்பை) பேட்ஸ்மேன் எனும் வகைப்பாட்டில் இருந்து வந்துள்ள அவரிடம் இது குறிப்பிடத்தக்க மாற்றம். பாம்பேவில் இளம் வயதில் வளரும் போது ஸ்ரேயாஸ் தனது காதுகளில் 100, 100, 100, 100 என்பதை மட்டுமே கேட்டிருப்பார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவர் இப்போட்டியில் செய்தது மிகவும் சிறந்த மாற்றம் என்று நினைக்கிறேன். அது நேர்மையான புத்திசாலித்தனம்” என்று கூறினார்.



