ஐசிசி 2024 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவின் தோற்கடித்த இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. அதே வேகத்தில் தற்போது சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் சமீப காலங்களாகவே பெரிய அணிகளுக்கு சவாலை கொடுத்து வருகிறது.
ரசித் கான் சவால்:
அந்த வரிசையில் இந்த உலகக்கோப்பையில் காலம் காலமாக இந்தியாவுக்கு சவாலை கொடுக்கக்கூடிய நியூசிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. எனவே இம்முறை இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றிக்கு போராட ஆப்கானிஸ்தான் அணியும் தயாராகியுள்ளது. குறிப்பாக ரஷித் கான், முகமது நபி மற்றும் நூர் அகமது ஆகிய 3 உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் தான் ஆப்கானிஸ்தான் அணியின் ஆணிவேர்களாக பார்க்கப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கான் இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு சவாலை கொடுக்கும் திறமையுடையவர். போதாக்குறைக்கு இப்போட்டி நடைபெற உள்ள பார்படாஸ் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருந்து வருகிறது. எனவே இப்போட்டியில் ரசித் கான் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரசித் கானுக்கு ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து வலையில் விழுந்து விடக்கூடாது என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அவரை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ராயுடு கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “ரசித் கானுக்கு எதிராக அதிகப்படியான ஆக்ரோசத்துடன் விளையாட முயற்சிப்பதே அவருக்கு எதிரான மிகப்பெரிய சவால் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: ஸ்லாக் ஸ்வீப் வரும்.. இனிமேல் தான் உண்மையான கோலியை பார்ப்பீங்க.. இர்பான் பதான் சொல்லும் காரணம்
“அங்கே தான் நீங்கள் வலையில் விழுந்து தடுமாறுவீர்கள். எனவே நீங்கள் சுமாரான பந்துகளுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவர் தாமாகவே சில சுமாரான பந்துகளை வழங்குவார். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் சமீபத்திய காயத்துக்கு பின் அவருடைய வேகம் பழைய அளவில் அச்சுறுத்தலாக இல்லை. எனவே உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் ரஷித் கானுக்கு எதிராக நன்றாக விளையாடலாம். அவரைப் பற்றி இந்திய பேட்ஸ்மேன்களும் நன்றாக அறிவார்கள்” என்று கூறினார்.



