இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. அந்தப் போட்டி ஜூன் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அப்போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் இந்த வருடம் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்க அணிகளுக்கு எதிராக அவர் 1, 4, 0 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் அவர் மீண்டும் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பதான் நம்பிக்கை:
ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். ஆனால் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் பொதுவாகவே அழுத்தமான பெரிய போட்டிகளில் உயர்ந்து நிற்கக் கூடிய விராட் கோலி சூப்பர் 8 சுற்றில் அசத்துவார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் லீக் சுற்று நடைபெற்ற அமெரிக்க மைதானத்தை விட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் தரமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனவே அங்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்து அசத்துவதை பார்க்க முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“பெரிய போட்டிகளில் எப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் அல்லவா? அது தான் அவரை மிகவும் ஸ்பெஷலாக உருவாக்குகிறது. ஸ்பெஷல் வீரரான அவர் அடுத்து வரும் போட்டிகளில் சரி இந்திய அணிக்காக நான் இதை செய்யப்போகிறேன் என்று சொல்வார். நேரம் வரும் போது குறிப்பாக பெரிய போட்டிகளில் நாம் விராட் கோலி அசத்தியதை பார்த்துள்ளோம்”
இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் பணம் கட்டுறாங்கன்னு.. எல்லாமே இந்தியாவுக்கு சாதகமா? ஐசிசி’யை விளாசிய மார்க் பட்சர்
“எனவே காத்திருந்து பாருங்கள். தற்போது ஸ்லாக் ஸ்வீப் அவருடைய பேட்டில் இருந்து வரும். கண்டிப்பாக அந்த ஷாட்டுகளை அவர் பயன்படுத்துவார். ஏனெனில் நியூயார்க் சூழ்நிலைகள் வேறு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிலவும் சூழ்நிலைகள் வித்தியாசமானது. அங்கே நீங்கள் உண்மையான விராட் கோலி முன்னுக்கு வருவதை பார்ப்பீர்கள்” என்று கூறினார்.



