WTC Final : மீண்டும் அப்டி செஞ்சீங்க கடுப்பாகிடுவேன், இந்தியாவுக்கு கருணையே காட்டாம ஆடுங்க – ஸ்மித்தை எச்சரித்த ஆலன் பார்டர்

Steve Smith Allan Border
- Advertisement -

இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றில் 2வது டெஸ்ட் சாம்பியனை முடிவு செய்யப் போகும் அந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்ற இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

மறுபுறம் ஏற்கனவே 5 உலகக் கோப்பைகளையும், டி20 உலகக் கோப்பையும் வென்று கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வென்று சாதனை படைக்க தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியா என்றாலே எதிரணிகளை தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோல்வியின் விளிம்பு வரை சென்றாலும் அதற்காக மனம் தளராமல் போராடி வெற்றி காணும் அணியாக அறியப்படுகிறது. குறிப்பாக வெற்றிக்காக ஸ்லெட்ஜிங் உட்பட எந்த எல்லையையும் தொடுவதற்கு தயங்காத அவர்கள் எதிரணிக்கு கருணை காட்டாத குணத்தைக் கொண்ட அணியாக பார்க்கப்படுகின்றனர்.

- Advertisement -

பார்டர் எச்சரிக்கை:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் கருணை காட்டாமல் விளையாடும் ஆஸ்திரேலியர்களின் குணம் குறைந்து விட்டதாக சமீபத்தில் விமர்சித்த சில முன்னாள் வீரர்கள் அதனாலேயே 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் ஒரு போட்டியில் ரவீந்திர ஜடேஜா எதிர்கொண்ட பந்துகளில் ரன்கள் எடுக்க தடுமாறிய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அதற்காக அதிருப்தியை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு சிறப்பாக “பந்து வீசினீர்கள்” என்று கட்டை விரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் காட்டினார்.

அதனால் அப்போதே கடுப்பான முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் பார்டர் “இங்கே நமது அணி தோல்வியை நோக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதிரணிக்கு ப்ளடி தம்ப்ஸ் அப் காட்டுகிறீர்களா” என்று கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்த மாபெரும் ஃபைனலில் ஆஸ்திரேலியர்களுக்கே உரிய கருணை காட்டாத குணத்துடன் இந்தியாவுக்கு எதிராக விளையாடுமாறு தங்களது அணியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதை விட்டுவிட்டு தம்ப்ஸ் அப் காட்டுவது போன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் கடுப்பாகி விடுவேன் என்று ஸ்டீவ் ஸ்மித்தை வெளிப்படையாக எச்சரித்துள்ள அவர் நியூசிலாந்தினரை போல் நட்பாக விளையாடினாலும் வெற்றியில் கண்ணாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பிரபல ஆஸ்திரேலிய இணையத்தில் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் அங்கே போட்டியிட சென்றுள்ளீர்கள். நானாக இருந்தால் அங்கே கடினமான கிரிக்கெட்டை விளையாடுவேன். ஆஸ்திரேலியர்களான நாம் எப்போதுமே கருணை காட்டாத ஸ்டைலில் தான் விளையாடுவோம். அதாவது கடினமாக அதே சமயம் நியாயமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அது தான் வெற்றியின் மேலே உங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன். அதே சமயம் நீங்கள் நட்பாகவும் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க:WTC Final : எல்லாரும் ஆஸி ஜெயிக்கும் நினைக்கலாம் ஆனா அது யாரு பக்கம் சாயுதோ அவங்க தான் வின்னர் – சாஸ்திரி அதிரடி பேட்டி

“ஆனால் அதற்காக இந்தியாவில் கடந்த தொடரில் ஒவ்வொரு முறையும் நல்ல பந்தை எதிர்கொண்ட போது தம்ப்ஸ் அப் காட்டிய ஸ்டீவ் ஸ்மித் போல் செயல்படக்கூடாது. அத்துடன் நியூசிலாந்து எப்போதும் நட்பாகவும் விளையாடுவார்கள். அதே சமயம் எதிரணியை தோற்கடித்து விட்டு தான் வெளியே வருவார்கள் என்பதை பின்பற்றுங்கள்” என்று கூறினார். அதாவது இந்த ஃபைனலில் இந்தியாவுக்கு கருணை காட்டாமல் ஆஸ்திரேலியர்களின் ரத்தத்தில் கலந்த ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுமாறு அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement