
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த ஆப்கானிஸ்தான் அணி இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெறும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது.
அதேவேளையில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியை வாஷ் அவுட் செய்யும் முனைப்புடன் தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள இளம் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசான்பர் இந்திய அணிக்கு எதிராக தான் எவ்வாறு செயல்படப்போகிறேன் என்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்த ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசும் வகையில் தயாராகி வருகிறேன். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் நான் இந்தியாவில் விளையாடி உள்ளதால் இந்த முறை அந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக மும்பை அணியில் இருந்த போது ரோகித் சர்மா எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும்? பேட்ஸ்மேன்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது? என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு எவ்வாறு திட்டங்களை வகுப்பது? மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு எவ்வாறு பந்து வீசுவது? என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை அவர் இந்த ஐபிஎல் தொடரின் போது எனக்கு வழங்கியிருந்தார். அவருடன் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்த வேளையில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு தேர்வாகாதது என் கையில் இல்லை.. எல்லாம் அவர்களிடம் தான் இருக்கு – புவனேஷ்வர் குமார் பேட்டி
நிச்சயம் இம்முறை அவர் கொடுத்த ஆலோசனை வைத்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராகவே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராகி வருகிறேன். இன்னும் எதிர்காலத்தில் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் என்னுடைய திறனும் மேம்பட்டுள்ளது என அல்லா கஸான்பர் கூறியது குறிப்பிடத்தக்கது.