
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர், நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரியான் டஸ்சேட் ஆகியோர் துணை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே போல தெனாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 464 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அத்துடன் ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 2014 கோப்பையை வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அதனாலேயே அவரை கௌதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளார்.
சகோதரருக்கு அட்வைஸ்:
அத்துடன் தாம் எதிர்கொண்டதிலேயே மோர்னே மோர்கெல் மிகவும் கடினமான பவுலர் என்றும் கௌதம் கம்பீர் ஒரு முறை பாராட்டியிருந்தார். இந்நிலையில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பதாக அல்பி மோர்கெல் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியில் தமது சகோதரர் மோர்னே மோர்கல் தவறுகளை செய்வதற்கு இடமே இல்லை என்று அல்பி மோர்கெல் கூறியுள்ளார்.
மேலும் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை பெற்று அவர்களுக்கு உதவினால் மோர்னே மோர்கெல் மிகச்சிறந்த பயிற்சியாளராக வருவார் என்றும் அல்பி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பது மிகப்பெரிய பொறுப்பு அல்லது வேலை என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை”
“இந்தியாவில் விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகள் ஆகியவை அவர்களின் அணியில் பிழை செய்வதற்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நிறைய சாதித்த சில நல்ல வீரர்களை கொண்டுள்ளனர். எனவே என்னைப் பொறுத்த வரை அவருக்கு இது இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை சம்பாதித்து நாள் முழுவதும் அவர்களின் திறமையை முன்னேற்ற உதவக்கூடிய வேலையாக இருக்கும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: தப்பு என் மேல தான் இருக்கு.. துலீப் கோப்பை இந்திய அணிகளில் தேர்வு செய்யப்படாதது ஏன்? ரிங்கு விளக்கம்
“அவருடன் பயிற்சியாக குழுவில் நான் வேலை செய்ததில்லை. ஆனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் பந்து வீச்சாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை பற்றிய அனுபவம் அவரிடம் நிறைய உள்ளது. எனவே அதை தன்னுடைய பயிற்சியில் உட்பகுத்தினால் அவர் இந்திய அணியில் நிறைய மதிப்பை ஏற்படுத்த முடியும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரில் மோர்னே மோர்கெல் பயிற்சியாளராக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.