
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் அந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் 5 சதங்கள் அடித்தும் ஃபினிஷிங் செய்யாதது மற்றும் 7 கேட்ச்கள் தவற விட்டது முக்கிய காரணமானது.
மேலும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மற்ற பவுலர்கள் கை கொடுக்காததும் இங்கிலாந்தின் வெற்றியை எளிதாக்கியது. அதே போல சுப்மன் கில் இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்தத் தவறியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்தார். அந்த வகையில் சுப்மன் கில் கேப்டன்ஷிப் பற்றி பெரிய அனுபவத்தைக் கொண்டிருக்காதது இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் சுப்மன் கில் அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் சுமாராக செயல்படுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பற்றி ஸ்டிக் ஆஃப் கிரிக்கெட் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் அனுபவமற்ற கேப்டனான சுப்மன் கில்லிடம் சிக்கல் இருக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருவார்?”
“அவருக்கு அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனைக் கொடுப்பதற்காக 30+ வயதுகளில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா மற்றும் கருண் நாயர் கிடைத்துள்ளார்கள். அவருக்கு இளம் அணி கிடைத்துள்ளதும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால் தந்திரோபாய ரீதியாக சுப்மன் கில் செய்யும் விஷயங்களில் செயலில் ஈடுபடுவதை விட எதிர்வினை ஆற்றுகிறார்” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் ஆரம்பக் காலங்களில் பென் ஸ்டோக்ஸ் இவ்வாறு தடுமாறியதாக தெரிவித்தார். எனவே சுப்மன் கில் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடப் பழகி செட்டாகும் போது வெற்றிகள் தேடி வரும் என்றும் அவர் கூறினார். இது பற்றி குக் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஒரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்கும் போது உங்களுடைய அணி புதிய தலைவருக்கு ஏற்றவாறு பழகும் காலம் இருக்கும்”
இதையும் படிங்க: தெ.ஆ 55/4 டூ 418/9.. 18 வயதில் இளம் வீரர் 2 வரலாற்று சாதனை சதம்.. 6, 0, 6, 6 விளாசி ப்ரேவிஸ் அதிரடி அறிமுகம்
“அது இங்கிலாந்து கேப்டனாக வந்த போது பென் ஸ்டோக்ஸ்க்கு நடந்தது. நாம் முதல் பந்திலிருந்தே அடிக்கப் போகிறோம் என்று அவர் சொன்னதை இங்கிலாந்து வீரர்கள் ஏற்று பழகுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி நடைபெறுகிறது.