இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இதுவரை 34 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். குறிப்பாக இலங்கைக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் 2 இன்னிங்சிலும் சதமடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
இதற்கு முன் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் இதுவரை ஜோ ரூட் 12377* ரன்களை குவித்துள்ள அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட், பிரைன் லாரா ஆகியோரை முந்தியுள்ளார். அதனால் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி அவர் உலக சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
எழுதி வெச்சுக்கோங்க:
1989 – 2013 வரை 24 வருடங்கள் இந்தியாவுக்காக 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் உட்பட 15921 ரன்கள் குவித்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் படைத்த சாதனையை யாராலும் உடைக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 33 வயதாகும் ரூட் இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.
எனவே அடுத்த 4 வருடங்களில் இன்னும் 3544 ரன்களை எடுத்தால் சச்சினை முந்தி அவர் புதிய உலக சாதனை படைப்பார். இந்நிலையில் ஜோ ரூட்டை போன்ற திறமையான பேட்ஸ்மேனை பார்த்ததில்லை என டேவிட் லாய்ட், அல்ஸ்டர் குக் கூறியுள்ளனர். மேலும் உலகின் மற்ற அணிகளை விட இங்கிலாந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் சச்சினை முந்தி அவர் உலக சாதனை படைப்பார் என்று தெரிவிக்கும் டேவிட் லாய்ட் இது பற்றி டெய்லி மெயில் பத்திரிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு.
சச்சினை முந்துவரா ரூட்:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து நிறைய போட்டிகளில் விளையாடுகிறது. எனவே ஜோ ரூட் கொண்டிருக்கும் திறமைக்கு சச்சின் டெண்டுல்கரின் 15921 ரன்கள் சாதனையை உடைப்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளது” என்று கூறினார். இது பற்றி அலெஸ்டர் குக் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் இங்கிலாந்தின் மகத்தான பேட்ஸ்மேன். அந்த சாதனையை அவர் தனது பெயரில் வைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மாவை நீக்க சொன்னதே தோனி தான். ஏன் தெரியுமா? – நிர்வாகி வெளியிட்ட தகவல்
“அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் விளையாடியதை பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. இன்றைய போட்டியில் அவர் 6 ரன்களில் இருந்த போதே 100 ரன்கள் இருப்பார் என்று நான் வர்ணனையில் சொன்னேன். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் தன்னுடைய வேலையில் மாஸ்டராக செயல்படுவதை பார்க்க முடிகிறது” என்று கூறினார். இருப்பினும் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காதது குறிப்பிடத்தக்கது.



