இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்து தொடரின் தற்போதைய நிலையில் முன்னிலை வகித்துள்ளது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக சிட்னி சென்றடைந்துள்ள இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் விலகுவதாக நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் கூறுகையில் : மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது முதுகு வலி காரணமாக ஆகாஷ் தீப் ரொம்பவே அவதிப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கௌதம் கம்பீர் உறுதி செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்ட அவர் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சிறப்பாக பந்துவீசிய அவருக்கு இந்திய வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால் விக்கெட்டுகள் கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிட்னி போட்டியிலும் சர்பாரஸ் கானுக்கு இடம் கிடைக்க வாய்ப்பே இல்ல.. இதை கவனிச்சீங்களா?
ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால் இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் சிட்னியில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



