வங்கதேசத்துக்கு எதிராக விரைவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் குணமடைந்த பின் இன்னும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத அவரை தேர்வு குழு தேர்ந்தெடுக்கவில்லை.
அதற்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய புதுமுக வேகபந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
வங்கதேச வாய்ப்பு:
அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்கதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி வெற்றிகரமாக பந்து வீச வேண்டும் என்ற ஆலோசனையை முகமது ஷமி தமக்கு கூறியதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
அதைப் பயன்படுத்தி துலீப் கோப்பையில் அசத்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமியிடம் பந்தை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி திருப்புவது என்பது பற்றி பேசினேன். அவர் அதை செய்வதை நான் பார்த்துள்ளேன். பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அரௌண்ட் விக்கெட் திசையிலிருந்து வீசும் போது பந்து இயற்கையாகவே பளபளப்பான பக்கத்தை நோக்கி நகரும்”
ஷமியின் ஆலோசனை:
“அந்த நிலையில் பந்தை உள்ளே கொண்டு வருவதில் அதிகமாக கவனம் செலுத்தாதீர்கள் என்று ஷமி என்னிடம் சொன்னார். தொடர்ச்சியாக சரியாக வீசினால் பந்து தாமாகவே உள்ளே வரும் அப்போது அது விக்கெட் எடுக்கும் பந்தாக மாறும் என்றும் ஷமி கூறினார். ஏனெனில் தொடர்ச்சியாக வெளியே செல்லும் போது பளபளப்பான பக்கத்தை பயன்படுத்தி உங்களால் பந்தை உள்ளே கொண்டு வர முடியும்”
இதையும் படிங்க: மறைமுகமாக பும்ராவுக்கு ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – வங்கதேச தொடருக்கான அணியில் நிகழ்ந்த சம்பவம்
“அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். எனவே அதிகமாக எதையும் முயற்சிக்காதீர்கள் என்று ஷமி சொன்னார். அதே சமயம் ஒரு பவுலராக நீங்கள் அதை செய்யும் போது பேட்ஸ்மேன்கள் பந்தை துரத்தி அவுட்டாக வாய்ப்புள்ளது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.