இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்து 23 ரன்களை முன்னிலையாகப் பெற்றது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 2வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 396 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்கள் எடுத்தனர். இறுதியாக 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 50/1 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 2வது நாள் மாலையில் ராகுல் அவுட்டான பின் ஆகாஷ் தீப் நைட் வாட்ச்மேனாக விளையாட வந்தார்.
மிரட்டிய நைட்வாட்ச்மேன்:
அடுத்த நாள் காலையில் 5 நிமிடத்திற்குள் அவுட்டாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதற்கு நேர்மாறாக நங்கூரமாக பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். நேரம் செல்ல செல்ல அபாரமாக பேட்டிங் செய்த அவர் ஜெய்ஸ்வாலுடன் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 66 ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் மிஸ்ராவுக்கு பின் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய நைட்வாட்ச்மேன் என்ற சாதனை படைத்த அவர் தனது முதல் அரை சதத்தையும் அடித்தார்.
அவருடைய ஆட்டம் குறித்து கேப்டன் கில் பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ஒரு போட்டி இருக்கிறது. அதாவது எங்கள் பவுலர்களிடம் “கொஞ்சம் பேட்டிங்கில் பங்காற்றுங்கள்” என்று பேட்ஸ்மேன்களான நாங்கள் சொல்வோம். இன்று எங்களுக்கு ஆகாஷ் பதிலடி கொடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். உங்களுடைய இடத்தில் பந்து வந்தால் அடியுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அந்த 66 ரன்கள் சதத்திற்கு கொஞ்சமும் குறைந்தது கிடையாது” எனக் கூறினார்.
ராகுல் அட்வைஸ்:
ஆகாஷ் தீப்புக்கு கொடுத்த பேட்டிங் ஆலோசனையை கே.எல் ராகுல் பகிர்ந்தது பின்வருமாறு. “பேட்ஸ்மேனாக சிந்தித்து விளையாடுங்கள், விக்கெட்டை பரிசளிக்காதீர்கள் என்று அவரிடம் 3வது நாள் காலை நீண்ட நேரமாக பேசினேன். களத்தில் ரிலாக்ஸ் செய்யாமல் முடிந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் ஷாட்டுகளையும் ரன்களையும் அடியுங்கள் என்று சொன்னேன். அதன் அடிப்படையில் அவர் அனைத்தையும் பொறுப்புடன் செய்தது மகிழ்ச்சி” என்று கூறினார்.
இதையும் படிங்க: 374லாம் ஈஸி சேசிங்.. இந்தியாவை தோற்கடிச்சு அந்த மேட்ச்சோட ரிப்ளேயை காட்டுவோம்.. ஜோஸ் எச்சரிக்கை
இறுதியில் ஆகாஷ் தனது ஆட்டம் குறித்துப் பேசியது பின்வருமாறு. “நான் எளிதில் அவுட்டாக கூடாது என்ற எண்ணத்துடன் நேற்றிரவு தூங்கச் சென்றேன். ஒருவேளை நல்ல பந்தில் அவுட்டானால் பரவாயில்லை. உடம்பில் அடி வாங்கினாலும் அவுட்டாகாமல் விளையாட விரும்பினேன். இந்திய என்னை அங்கே விளையாட விரும்பிய போது ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எனக்கு மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார்.



