இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் செய்யப்பட்டு அணிக்குள் கொண்டுவரப்பட்ட ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் புதிய கேப்டனாக அறிவித்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ரோஹித் சர்மா வெளியேற அதிக வாய்ப்பு :
ரசிகர்களும் ரோகித் சர்மாவை கேப்டன் பதிவிலியிருந்து நீக்கியதால் அந்த அணியை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர். மேலும் மும்பை அணியில் உள்ள சில வீரர்களுக்கே புதிய கேப்டனாக பாண்டியா வந்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் ரோகித் நீடிக்காததால் அவர் மும்பை அணியுடன் நீடிக்க மாட்டார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறும் பட்சத்தில் அவரை மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிச்சயமாக மும்பை அணி ரோகித் சர்மாவை தக்க வைக்காது அல்லது ரோகித் தானாகவே விருப்பப்பட்டு மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்று முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : அடுத்த சீசனில் மும்பை அணியுடன் ரோகித் சர்மா தொடர்வது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. நிச்சயமாக என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறுவார் என்பதே என்னுடைய உள்ளுணர்வாக இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து அவர்களது தரப்பில் எந்த ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
ஒருவேளை ரோகித் சர்மா ரீடெயின் செய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் அந்த அணியில் நீடிக்க வேண்டும் என்பதனால் மும்பை அணியே அவரை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இப்படி ஏதாவது ஒரு வகையில் ரோகித் சர்மா அந்த அணியை விட்டு வெளியேறினாலும் மற்றொருபுறம் சூரியகுமார் யாதவை அவர்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க : எல்லா நேரமும் முடியாது.. 2025 தொடரில் அந்த இந்திய பவுலர் ரூட்டை தெறிக்க விடலாம்.. மைக்கேல் வாகன்
ஏனெனில் தற்போதைய இந்திய டி20 கேப்டனான அவரே அடுத்த சில ஆண்டுகளுக்கு மும்பை அணியின் முக்கியமான வீரராக இருக்கப் போவதால் நிச்சயம் சூரியகுமார் யாதவை மும்பை அணி எக்காரணம் கொண்டும் வெளியேற்றாது என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.