இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது கடந்த ஜூலை 2-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.
இந்த வெற்றியை எனது சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன் : ஆகாஷ் தீப்
இந்த போட்டியின் போது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனுக்குள் வந்த ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சின் போது 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு அனைவரது மத்தயிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் கிடைத்த இந்த வெற்றியை தனது சகோதரிக்கு அர்ப்பணிப்பதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நான் இதுவரை இந்த விடயத்தை யாரிடமும் சொல்லவில்லை. என்னுடைய மூத்த சகோதரி கேன்சர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகவே பெரும் அவதிப்பட்டார். தற்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது முகத்தில் மகிழ்ச்சி வர வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த வகையில் இந்த சிறப்பான பந்துவீச்சு அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை நான் அவருக்காக அர்ப்பணிக்கிறேன்.
எனக்கு தேவையெல்லாம் அவரது முகத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். எப்பொழுது என் கையில் பந்து இருந்தாலும் என்னுடைய சகோதரியின் முகத்தை நினைத்துக் கொண்டு அவரின் முகத்தில் மகிழ்ச்சி வர வேண்டும் என்று நினைத்தே பந்து வீசினேன். அந்த வகையில் இந்த போட்டியில் எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நிச்சயம் எனது இந்த செயல்பாடு அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என ஆகாஷ் தீப் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : 49 ஆண்டுகளில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப் – விவரம் இதோ
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான ஆகாஷ் தீப் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் இந்த போட்டியில் எடுத்த 10 விக்கெட்டுகளையும் சேர்த்து தற்போது 8 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.



