கடந்த 2004-ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரின் முதலாவது போட்டி முல்தான் நகரில் மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிக்ளேர் செய்யப்பட்ட பிறகு நடந்தது என்ன? :
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வீரேந்திர சேவாக் 309 ரன்களையும், சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சேவாக் முச்சதத்தை பதிவு செய்திருந்த வேளையில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சச்சின் 194 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த போதே டிராவிட் டிக்ளேர் செய்தார்.
ராகுல் டிராவிட் இப்படி சச்சின் டெண்டுல்கரை இரட்டை சதம் அடிக்க விடாமல் தடுத்து டிக்ளேர் செய்தது அப்போதே பெரிய அளவில் பேசு பொருளாக மாறியிருந்தது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த டிக்ளரேஷன் முடிவுக்கு பிறகு இந்திய அணிக்குள் நடந்தது என்ன? என்பது குறித்து அப்போது இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருந்த துவக்க வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : அந்த போட்டியின் போது நானும் இந்திய அணியின் வீரர்களுடன் தான் இருந்தேன். அந்த டிக்ளரேஷன் முடிவுக்கு பிறகு யாருமே பெரிய அளவில் பேசிக்கொள்ளவில்லை. மூத்த வீரர்களுக்கு இடையே சில பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடித்து வந்தது. நான் அப்போது மிகவும் இளம் வீரர் என்பதனால் அந்த உரையாடலுக்குள் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் சச்சின் மிகவும் வருத்தத்துடன் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தார். அவர் அவ்வளவு சோகமாக இருந்து நான் என்றுமே பார்த்ததில்லை.
சச்சின் எப்போதுமே கோபப்பட மாட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகும் அவர் கோபமாக இல்லை ஆனால் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அந்த போட்டியின் போது டிராவிட் கேப்டனாக இருந்த வேளையில் கங்குலையும் டிரெஸ்ஸிங் ரூமில் தான் இருந்தார். காயம் காரணமாக அவரால் அந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. டிராவிடின் இந்த முடிவுக்கு பின்பு கங்குலியும் ஒரு காரணமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 2015லயே சென்னையில் அவருக்கு எதிரா ஆடுனேன்.. இப்போ நாட்டுக்காக விளையாடுவோம்ன்னு எதிர்பாக்கல.. லபுஸ்ஷேன் பேட்டி
ஆனால் அந்த முடிவு கேப்டனின் தனிப்பட்ட முடிவு கிடையாது. சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எடுத்த முடிவாக தான் இருக்கும். பின்னர் அந்த போட்டி நான்கு நாட்களில் முடிவடைந்த பிறகு பேசிய டிராவிட் : இப்படி ஆட்டம் நான்கு நாட்களுக்குள் முடிவடையும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் டிக்ளர் செய்திருக்க மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்ததாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



