இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய டி20 அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றியுள்ள வேளையில் அடுத்ததாக ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நடைபெற இருக்கும் சில டி20 தொடர்களில் பங்கேற்கும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
லக்னோ அணியின் வீரரை பாராட்டிய : ஆகாஷ் சோப்ரா
அந்த வகையில் ஏற்கனவே சில இளம் வீரர்களின் பெயர்கள் விரைவில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் என்று பேச்சுக்கள் இருந்து வரும் வேளையில் நேற்றைய ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவும் வெகுவிரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ஆர்.சி.பி அணி துரத்துகையில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக விராட் கோலியை அவர் டக் அவுட்டாக்கியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : விராட் கோலிக்கு அசைக்க முடியாத ஒரு இடத்தில் பந்துவீசி அவரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஒவ்வொரு இளவரசரும் ராஜாவாக விரும்புவார்கள் ஆனால் ராஜாவை வீழ்த்தாமல் நீங்கள் ராஜாவாக முடியாது. எனவே பிரின்ஸ் யாதவ் அதை தற்போது மிகச் சிறப்பாக செய்து காண்பித்துள்ளார். அதுமட்டும் இன்றி தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா ஆகியோரையும் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : சூரியகுமார் யாதவின் கேப்டன் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.. புதிய டி20 கேப்டன் யார்? – விவரம் இதோ
நிச்சயம் இந்த வீரர் இந்திய அணிக்காக வெகுவிரைவில் விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஆகாஷ் சோப்ரா அவரை பாராட்டியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக இந்த ஆண்டு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பிரின்ஸ் யாதவ் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசுவதாலும் அவரது லைன் மற்றும் லென்த் மிகச் சிறப்பாக இருப்பதாலும் அவர் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



