
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வர இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வேளையில் இறுதி கட்டத்தை நெருங்கும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றில் விளையாட பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதில் முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.
அதனை தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இந்த தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக முதலாவது குவாலிபயர் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதனால் எதிர்வரும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மே 29ஆம் தேதி நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாட இருக்கும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீண்ட ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் அவர்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்கள் இம்முறை கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : லக்னோ அணியை வீழ்த்திய கையோடு தல தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா – விவரம் இதோ
எனவே என்னை பொருத்தவரை பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூரு அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.