இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்கும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின்அறிவிப்பு இன்று வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை இன்று நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது ஏன்? : அகார்கர் விளக்கம்
அதில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில்லையும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டையும் அறிவித்தது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால் அவர்களுக்கு பதிலாக சில வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல் ராகுல் போன்றோர் போட்டியில் இருந்த வேளையில் அவர்களை தாண்டி இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு இந்த கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் புதிய கேப்டனுக்கான பரிசீலனையில் தகுதியான அனைத்து வீரர்களையும் வைத்து ஒப்பீடுகளை நடத்தினோம். அந்த வகையில் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்துள்ளோம். ஏனெனில் கடந்த ஓராண்டாக அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
அதோடு அவர் கேப்டனாக இருக்கும் போது ட்ரெஸ்ஸிங் ரூமிலும் நல்ல சூழல் இருக்கும் என்று நம்புகிறோம் என்பதனாலே அவரை தேர்வு செய்துள்ளோம். நாம் எதிர்கால டெஸ்ட் அணியின் கேப்டனை தேர்வு செய்யும்போது ஒன்று அல்லது இரண்டு தொடர்களுக்கான கேப்டனை தேர்வு செய்ய முடியாது. நீண்ட பயணத்திற்கு தகுதியான ஒருவரை தேர்வு செய்தாக வேண்டும்.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழு வீரர்களின் லிஸ்ட் இதோ
அந்த வகையில் தான் சுப்மன் கில்லை நீண்ட எதிர்காலம் கொண்ட டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் மிகச் சிறப்பான வகையில் முன்னேறி வருகிறார். இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே இந்த கேப்டன்சி வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



