இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு :
இதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டன் யார்? அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி : இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லையும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டையும் நியமித்துள்ளது. மேலும் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை தவிர்த்து பெரிய இடைவெளிக்கு பின்னர் கருண் நாயர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோன்று இந்திய ஏ அணியின் கேப்டனான அபிமன்யு ஈஸ்வரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோருடன் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூரும் இடம் பிடித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து முதன்மை பேட்ஸ்மேன்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் போன்ற வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : இதைமட்டும் பண்ணா போதும்.. இன்னும் 2 வருஷத்துல வைபவ் இந்திய அணிக்காக ஆடுவாரு – கோச் நம்பிக்கை
1) சுப்மன் கில் (கேப்டன்), 2) ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) கே.எல் ராகுல், 5) சாய் சுதர்சன், 6) அபிமன்யு ஈஸ்வரன், 7) கருண் நாயர், 8) நிதீஷ் ரெட்டி, 9) ரவீந்திர ஜடேஜா, 10) துருவ் ஜுரேல், 11) வாஷிங்டன் சுந்தர், 12) ஷர்துல் தாகூர், 13) ஜஸ்ப்ரீத் பும்ரா, 14) முகமது சிராஜ், 15) பிரசித் கிருஷ்ணா, 16) ஆகாஷ் தீப், 17) அர்ஷ்தீப் சிங், 18) குல்தீப் யாதவ்.



