இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது இடத்தினை உறுதிசெய்த அவர் டி20 போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் நிரந்தர இடத்தினை பிடிப்பதற்காக கடுமையாக உழைத்தார். அந்த வகையில் உள்ளூர் போட்டியிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது ஏன் ? : அஜித் அகார்கர்
அதனை தொடர்ந்து நிச்சயம் டெஸ்ட் அணியில் அவர் மீண்டும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அப்படி இன்று வெளியான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட கூடியவரும், அனுபவ வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர் இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலப்படும். ஆனால் அவரை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என்ன? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை பொறுத்தவரை ஒரு சீனியர் வீரர் தான். அதனால் தான் இந்திய ஏ அணிக்கும் அவர் கேப்டனாக இருந்தார். அவரிடம் இருக்கும் தலைமைப் பண்பையும் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் நாங்கள் பார்த்தோம். ஆனால் அவரது உடற்தகுதி காரணமாக அவரே தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதன் காரணமாகவே அவரை நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என்று கூறி அஜித் அகார்கர் பேசியிருந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கேப்டனாக இருந்த அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக அந்த போட்டியில் இருந்து விலகினார்,
இதையும் படிங்க : கருண் நாயரை தாண்டி தேவ்தத் படிக்கலை தேர்வு செய்தது ஏன்? தெளிவான விளக்கத்தை அளித்த – அஜித் அகார்கர்
ஏனெனில் தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தான் ரெட்பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்க போவதாகவும் அறிவித்தார். தனக்கு இருக்கும் காயத்தை வைத்துக்கொண்டு ஐந்து நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறிய அவர் இந்த முடிவை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



