
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 11 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்தியா ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது.
இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 கேப்டன்கள் இருப்பது கடினம் என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இம்முடிவு பற்றி அவர் விளக்கமாக பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் தற்சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். அவர்களின் 2027 உலகக் கோப்பை தேர்வு பற்றி இன்றே பேசத் தேவையில்லை”
“கேப்டன்ஷிப் மாற்றம் மட்டுமே முக்கிய கேள்வியாக இருக்கும். முதலில் 3 விதமான ஃபார்மட்டுக்கும் திட்டமிடுதலின் அடிப்படையில் 3 கேப்டன்கள் இருப்பது நடைமுறையில் அசாத்தியமானது. மேலும் ஏதோ ஒரு கட்டத்தில் நீங்கள் அடுத்த உலகக் கோப்பை எப்போது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகள் குறைவாக விளையாடப்படுகின்றன”
“எனவே புதிய கேப்டனாக வருபவருக்கு போதுமான போட்டிகள் கிடைக்காது. புதியவர் வந்தால் உலகக் கோப்பைக்கு திட்டமிட போதுமான நேரம் வேண்டும். ஒருவேளை சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்லாமல் போயிருந்தால் கூட ரோஹித்தை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்குவது கடினமான இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு இந்தியாவுக்காக ரோஹித் அசத்தினார்”
“ஆனால் சில நேரங்களில் நீங்கள் வருங்காலத்தைப் பார்க்க வேண்டும். நீங்கள் எப்போதும் அணியின் நன்மைக்காகவே அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டும். 5 – 6 மாதங்கள் கழித்து நீங்கள் இதே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் வரலாம். எனவே நீங்கள் அந்த முடிவை கொஞ்சம் முன்னதாகவே எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த ஃபார்மட்டில் அணியை தலைமைத் தாங்குவதற்கான தன்னம்பிக்கை புதியவருக்கு (கில்) கிடைக்கும்”
இதையும் படிங்க: டாஸ் வின் பண்ணி இப்படி ஆகும்னு நினைக்கல.. இந்தியாவுல இது ரொம்பவே கஷ்டம் – வெ.இ கேப்டன் வருத்தம்
“இதுவே இந்த முடிவின் ஐடியாவாகும். அது கடினமானதாகும். இருப்பினும் ஒருவர் (கில்) வெற்றிகரமாக செயல்படும் போது நீங்கள் அதை எடுக்க வேண்டும். அடுத்து வருபவருக்கு போதுமான நேரத்தை வழங்குவதே எங்களுடைய திட்டமாகும். தேர்வாளர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்கள் உட்பட அனைவருக்குமே 3 விதமான ஃபார்மட்டிலும் 3 வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது பின்னடைவைக் கொடுக்கும்” என்று கூறினார்.