
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நடைபெறும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30 முதல் 2023 ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெறுகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் தங்களுடைய இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் வகையில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நீண்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக வெளியிடப்பட்டுள்து. புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜித் அகார்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற பிரத்தியேக செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்ட அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோருடன் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சினையை தீர்ப்பதற்காக திலக் வர்மா தேர்வாகியுள்ளார். அதே போல ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இடம் பிடித்துள்ள நிலையில் சுழல் பந்து வீச்சாளர்களாக அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷார்துல் தாகூர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக வீரர்கள் இல்லையே:
இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் சுமாராக செயல்பட்டும் சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ள இந்த அணியில் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதன்மை ஸ்பின்னராக கருதப்படும் சஹாலும் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் இத்தொடரில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உலகக் கோப்பையில் 99% இடம் கிடைக்காது என்ற நிலைமையில் பெயருக்காக கூட தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இடம் பெறாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
அதிலும் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத திலக் வர்மா நேரடியாக தேர்வாகியுள்ள நிலையில் தமிழகத்தின் இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் இருந்தும் பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் அணியின் கலவையை கருத்தில் கொண்டே ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை தியாகம் செய்தால் மட்டுமே அவர்களை சேர்க்க முடியும் என்ற நிலைமை ஏற்படுவதாலேயே ஆசிய கோப்பை அணியில் சேர்க்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் ஒருவேளை 2023 உலகக்கோப்பையில் அவர்களுக்கான தேவை ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் அணிக்குள் கொண்டு வருவோம் என கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “8 அல்லது 9வது இடத்தில் விளையாடுபவர்கள் பேட்டிங் செய்பவர்களாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்”
“அதில் அக்சர் படேல் சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் பேட்டிங்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனாலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் மிகவும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர். அவர் இந்திய அணியில் இருப்பது பேட்டிங் வரிசையின் ஆழத்தை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் மேல் வரிசையில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால் அவரை வைத்து சமாளிக்கலாம். அதே சமயம் நாங்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோரை பற்றியும் நினைத்தோம்”
இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாத்துக்கு எதிராக மட்டும் புலி, மற்ற அணிகளுக்கு எதிராக பூனையாக செயல்படும் நட்சத்திர வீரர் – காரணம் இதோ
“ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெளியே இருந்தால் மட்டுமே அவர்களை விளையாட வைக்க முடியும். இருப்பினும் அடுத்த 2 மாதங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய வேலையை செய்வார்கள் என்பதால் அதை எங்களால் செய்ய முடியாது” என்று கூறினார். இது பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “இப்போதும் அவர்களைப் போன்ற வீரர்களுக்கு கதவு திறந்து இருக்கிறது. ஒருவேளை சஹால் உலகக்கோப்பையில் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால் நாங்கள் அவரை எடுத்துக் கொள்வோம். அதே நிலைமை வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினுக்கும் பொருந்தும்” என்று கூறினார்.