வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 121 ரன்கள் எடுத்த நிலையில வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச் மற்றும் ஜோமேல் வேரிக்கன் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்தர்பால் 32 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ப்ரத் வெய்ட் 37* ரன்களும் மெக்கன்சி 14* ரன்களும் எடுத்த நிலையில் நிறைவுக்கு வந்த 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 86/1 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இத்தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அஜிங்க்ய ரகானே 3, 8 என இதுவரை களமிறங்கிய 2 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
கேப்டனா வருவீங்க:
கடந்த 2011இல் அறிமுகமாகி 2015 உலகக் கோப்பையில் முதன்மை வீரராக இருந்த அவர் நாளடைவில் மெதுவாக விளையாடியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்தாலும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து அசத்தி வந்தார். இருப்பினும் 2021க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் கடந்த 2202 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனாலும் மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஐபிஎல் 2023 தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி முழுமையான ஃபார்முக்கு திரும்பிய அவர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு பெற்றார். அதில் 89, 46 ரன்கள் எடுத்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றிய அவர் மீண்டும் தம்முடைய இழந்த இடத்தை மீட்டெடுத்தாலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இத்தொடரில் தடுமாறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 36க்கு ஆல் அவுட்டான பின் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு திருப்பி இளம் வீரர்களுடன் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை பெற்றுக் கொடுத்த அனுபவமிக்க ரகானே 36 வயதாகும் ரோகித்துக்குப் பின் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதற்கு தொடர்ந்து ரகானே சீராக ரன்களை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் கழற்றி விடப்பட்ட புஜாரா மீண்டும் கம்பேக் கொடுத்து கேரியரை தொடர்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ரகானே தன்னுடைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும். குறிப்பாக 80 – 90 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தொடர்ந்து அசத்துவதே அவரிடம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே அதிலிருந்து அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா விடைபெற்ற பின் இந்தியாவுக்கு அவர் தான் சரியான கேப்டன்ஷிப் செய்யக்கூடிய வீரராக இருக்கிறார். குறிப்பாக நல்ல ரன்களை மட்டும் அடித்தால் அவரை நோக்கி அனைத்தும் வரும்”
“சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் 36க்கு ஆல் அவுட்டான பின் மெல்போர்னில் சதமடித்து வைத்திருந்த ஃபார்மை அப்படியே கடைப்பிடித்திருந்தால் அவர் தான் இந்நேரம் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருந்திருப்பார். இருப்பினும் அதை அவர் தவற விட்டு விட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் தன்னை மாற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அசத்தியதால் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவரை தேர்வுக்குழு கேப்டனாகவும் பார்க்கிறது. எனவே தற்போது நல்ல வயதை கொண்டுள்ள அவர் ரன்களை மட்டும் அடிக்க வேண்டும். ஒருவேளை அதை செய்ய தவறினால் மீண்டும் மொத்தமாக அனைத்தும் பறிபோகலாம்”

இதையும் படிங்க:IND vs WI : 76-ஆவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்த கிங் கோலிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க
“புஜாராவை பொறுத்த வரை மீண்டும் வருவது கடினமாகும். ஏனெனில் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை கருத்தில் கொண்டு நீங்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்றவை நோக்கி நகர்ந்துள்ளீர்கள். மேலும் சுப்மன் கில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள நிலையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் வருவார்கள் என்பதால் புஜாரா கம்பேக் கொடுப்பது கடினமாகும்” என்று கூறினார்.



