இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நான்காவது போட்டி துவங்க உள்ளது.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அந்தப் போட்டியில் பணிச்சுமை காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனித்துவமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் காயத்தை தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார்.
பிரசித் கிருஷ்ணா வேண்டாம்:
அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதில் 2வது போட்டியில் ஆகாஷ் தீப் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். மறுபுறம் முதல் 2 போட்டிகளில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா சிறப்பாக விளையாடத் தவறியதால் பும்ரா வந்த போது 3வது போட்டியில் நீக்கப்பட்டார். எனவே அடுத்ததாக பும்ரா ஓய்வெடுக்கப் போகும் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்கும் போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். இது பற்றி ரஹானே அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடவில்லையெனில் அர்ஷ்தீப் மிகவும் சரியானவராக இருப்பார். ஏனெனில் இங்கிலாந்தில் இடது கை பவுலரான அவர் இரு புறமும் பந்தை ஸ்விங் செய்வார்”
ரஹானே கருத்து:
“வித்தியாசமான கோணத்தில் பவுலிங் செய்யக்கூடிய அவரால் ஸ்பின்னர்களுக்கான காலடித் தடங்களை (ரஃப்) உருவாக்க முடியும். எனவே பும்ரா விளையாடாவிட்டால் அடுத்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக விளையாடலாம்” என்று கூறினார். இதுவரை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாகி அசத்திய அர்ஷ்தீப் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை.
இதையும் படிங்க: 800 ஓவர்ஸ்.. பும்ராவுடன் விளையாடுவதால் சிராஜ் உழைப்பு தெரியல.. 3வது சாதனை பவுலர் பற்றி ஆகாஷ் சோப்ரா
இதற்கிடையே பயிற்சியில் ஈடுபட்ட போது அர்ஷ்தீப் சிங் லேசான காயத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் உறுதி செய்த துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் அவரை மருத்துவக் குழுவினர் சோதித்து வருவதாக கூறியுள்ளார். எனவே பும்ராவுக்கு பதிலாக விளையாடுவதற்கு அர்ஷ்தீப் தயாராக இருக்கிறாரா என்பது உறுதியாகத் தெரியாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



