விட்டா அவ்ளோதான், தனது இடத்தை நிலையாக்க வெ.இ தொடருக்கு பின் ஓய்வெடுக்காமல் – ரகானே எடுக்கும் முக்கிய முடிவு

Rahane
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் நம்பர் ஒன் பவுலரான அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

அதில் கேப்டனாக ரோகித் சர்மா பதவி விலக வேண்டும் என்று தெரிவிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் அஜிங்க்ய ரகானே வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்த ஃபைனலில் சூப்பர்ஸ்டார்களாக கொண்டாடப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். அந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்து திண்டாடிய இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரகானே 89 ரன்கள் எடுத்து குறைந்தபட்சம் இன்னிங்ஸ் அவமான தோல்வியை சந்திப்பதிலிருந்து காப்பாற்றினார் என்றால் மிகையாகாது.

ஓய்வு கிடையாது:
மேலும் 2வது இன்னிங்சிலும் 46 ரன்கள் எடுத்து போராடி அவுட்டான அவர் கடந்த 2011இல் அறிமுகமாகி 2015 உலகக்கோப்பையில் முதன்மை வீரராக விளையாடிய போதிலும் நாளடைவில் மெதுவாக விளையாடியதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலி இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை சரித்திர தோல்வியிலிருந்து வெற்றிப் பாதைக்கு திருப்பினார்.

Ajinkya Rahane WTC Final

மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் சீனியர்கள் காயத்தால் வெளியேறிய போது இளம் வீரர்களை சரியாக வழி நடத்திய அவர் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் அதன்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரில் கழற்றி விடப்பட்ட போதிலும் மனம் தளராமல் போராடிய அவர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து 2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையான சென்னையில் அட்டகாசமாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அப்படி கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் போராடி இந்திய அணிக்குள் நுழைந்துள்ள அவர் இந்த இடத்தை தக்க வைக்கும் நோக்கத்தில் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்பாமல் நேரடியாக இங்கிலாந்துக்கு பயணித்து கவுண்டி தொடரில் விளையாட முடிவெடுத்துள்ளார். குறிப்பாக மிகவும் போட்டியை கொண்ட இந்திய அணியில் ஏற்கனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு இழந்து விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட நல்ல ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

rahane 1

எனவே அடுத்ததாக 6 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற காயமடைந்த வீரர்கள் வந்தாலும் தமக்கான இடத்தை உறுதி செய்வதற்காக கவுண்டி தொடரில் விளையாடி தற்போது வைத்துள்ள ஃபார்மை தொடர ரகானே விரும்புவதாக தெரிகிறது. அந்த வகையில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக 8 முதல் தர போட்டிகளில் விளையாடும் ரகானே ஒருநாள் தொடரான ராயல் லண்டன் கோப்பையிலும் முழுமையாக விளையாட உள்ளார்.

இதையும் படிங்க:விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு என்ன தெரியுமா? இத்தனை கோடிகளா? – தனியார் நிறுவனம் வெளியிட்ட தகவல்

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 2 போட்டிகளுக்கு பின் நேரடியாக இங்கிலாந்துக்கு பயணிக்கும் ரகானே லீசெஸ்டர்ஷைர் அணிக்காக எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ளார். மேலும் இந்திய வெள்ளைப்பந்து அணியில் விளையாடப் போவதில்லை என்பதால் தொடர்ந்து அங்கேயே ஆகஸ்ட் மாதம் ராயல் லண்டன் கோப்பையிலும் செப்டம்பரில் நடைபெறும் 4 கவுண்டி போட்டிகளிலும் அவர் விளையாட உள்ளார்” என்று கூறினார்.

Advertisement