
இங்கிலாந்தில் 2024 கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் டிவிசன் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள லீசஸ்டர்ஷைர் அணிக்காக இந்தியாவின் சீனியர் வீரர் அஜிங்க்ய ரஹானே விளையாடி வருகிறார். அந்த நிலையில் கிளாமோர்கன் மற்றும் லீசஸ்டர்ஷைர் அணிகள் மோதிய லீக் போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி கார்ட்டிப் மைதானத்தில் துவங்கியது.
அதில் முதலில் பேட்டிங் லீசஸ்டர்ஷைர் 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 46, இந்தியாவின் 42 ரன்கள் எடுத்தனர். கிளாமோர்கன் சார்பில் அதிகபட்சமாக வேன் டெர் குக்டன், டேனியல் டுத்வெய்ட் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கிளாமோர்கன் 550 ரன்கள் குவித்து தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் கோலின் இங்ரம் அபாரமாக விளையாடி இரட்டை சதமடித்து 257* ரன்களும் கிரண் கார்ல்சன் 85 ரன்களும் எடுத்தனர். லீசஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக டன் ஹோலண்ட் 4, ரெஹன் அஹ்மத் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 249 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய லீசஸ்டர்ஷைர் அணிக்கு ரிஷி படேல் 23, இயன் ஹோலண்ட் 27, கேப்டன் லெவிஸ் ஹில் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 74-3 என தடுமாறிய லீசஸ்டர்ஷைர்க்கு மீண்டும் ரகானே மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். 4வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய அந்த ஜோடியில் ரகானே சதமடித்து 13 பவுண்டரி 1 சிக்சருடன் 102 ரன்கள் விளாசி 2வது இன்னிங்ஸில் தனது போராட்ட குணத்தை காட்டினார். அவருடன் ஹேண்ட்ஸ்கோப் சதமடித்து 18 பவுண்டரியுடன் 139* ரன்களும் எடுத்தனர். அதன் 369-6 ரன்கள் எடுத்த லீசஸ்டர்ஷைர் முன்னிலை பெற்ற போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த சதத்தின் வாயிலாக நவம்பர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தம்மை தேர்ந்தெடுக்க புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ரகானே சிக்னல் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். 2011 முதல் இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மேனாக செயல்பட்ட ரகானே நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். மேலும் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ராஜாங்கம் நடத்திய காலங்களில் அவர் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டார்.
இதையும் படிங்க: 190 ரன்ஸ்.. 33 வருடத்துக்குப் பின் இலங்கை படுதோல்வி.. தொடரை வென்ற இங்கிலாந்து வீரர் 40 வருட சாதனை
குறிப்பாக 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே மெல்போர்னில் சதமடித்து இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அதன் பின் தடுமாறியதால் நீக்கப்பட்ட அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கம்பேக் கொடுத்ததை போல இந்திய அணியில் மீண்டும் தேர்வாக தற்போது இங்கிலாந்தில் போராடி வருகிறார்.