
இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெஸ் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
அவர்களது ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 600 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 2வது நாளில் போராடி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 71/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று திண்டாடியது. அந்த நிலைமையில் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 (51) ரன்களில் அவுட்டானார்.
காப்பாற்றும் ரகானே:
அதனால் 151/5 என 2வது நாள் முடிவில் தடுமாறிய இந்தியா ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கு 119 ரன்கள் வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்தனர். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளின் 2வது பந்திலேயே கேஎஸ் பரத் 5 ரன்னில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த சர்துல் தாக்கூர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்த ரகானே ஆரம்பத்திலேயே பட் கமின்ஸ் நோ-பால் போட்டதால் கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்து சிக்ஸருடன் சிறப்பான அரை சதமடித்து இந்தியாவை காப்பாற்ற போராடினார்.
அவருக்கு உறுதுணையாக தாக்கூர் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி நிலையாக பேட்டிங் செய்ததால் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டது. அந்த வகையில் நேரம் செல்ல செல்ல கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடியை உடைக்க முடியாமல் போராடிய ஆஸ்திரேலியா அவ்வப்போது கேட்ச்சை கோட்டை விட்டது. அதை பயன்படுத்திய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியதால் 2வது நாள் உணவு இடைவெளியில் 260/6 ரன்களை எடுத்துள்ள இந்தியா ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கு இன்னும் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற ஓரளவு நல்ல நிலைமைக்கு போராடி வந்துள்ளது.
மேலும் உணவு இடைவெளிக்கு முன்பாக நோ-பால் வீசியதால் தப்பிய சர்துல் தாக்கூர் 36* ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில் மறுபுறம் ரகானே சதத்தை நெருங்கி 89* ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக மிடில் ஆர்டரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2020/21இல் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி நாடு திரும்பிய போது கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு திருப்பினார்.
அத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறிய போது இளம் வீரர்களை வைத்து அசத்திய அவர் காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இருப்பினும் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது. ஆனால் மனம் தளராமல் சமீபத்திய ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஃபார்முக்கு திரும்பி இப்போட்டியில் தேர்வானார்.
இதையும் படிங்க:WTC Final : 8 பால்’ல நடந்தத பாருங்க, அவர் இருந்தா ஹெட் 163 ரன் அடிச்சுருப்பாரா? ரோஹித் – டிராவிட்டை விளாசும் ரசிகர்கள்
அதில் இதர வீரர்கள் தடுமாறிய போதும் அசத்தும் அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அரை சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்து 5000 டெஸ்ட் ரன்களை கடந்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அப்படி 12 மாதங்கள் 512 நாட்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டுகின்றனர்.