
2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில வாரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவர் உட்பட மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணியானது முழு பட்டியலுடன் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணித்தேர்வின் மீது பல்வேறு விவாதங்கள் சமூக அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த தனது கணிப்பினை இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பிளேயிங் லெவனில் : முதன்மை துவக்க வீரராக அபிஷேக் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அவருடன் இணைந்து துவக்க வீரராக விளையாட சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். ஏனெனில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருக்கும் போது அவரே நிச்சயம் ஓப்பனராக களம் இறங்குவார் என்று கூறி இருக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் சம்சன் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவையும், நான்காவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்துள்ள அவர் ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மாவையும், ஏழாவது இடத்தில் கூடுதல் பேர்ட்ஸ்மேனாக ஷிவம் துபே அல்லது ரிங்கு சிங் ஆகிய இருவரில் ஒருவர் இடம் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எட்டு மற்றும் ஒன்பது ஆகிய இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் பத்தாவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும், 11-வது இடத்தில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப குல்தீப் யாதவோ அல்லது ஹர்ஷித் ராணாவோ விளையாடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ரஹானே தேர்வு செய்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ராகுல், சிராஜ், சுந்தர் லீவ்ல விளையாடாம என்ன பன்றாங்க? தெ.ம அணிக்கு கொட்டு வைத்து எச்சரித்த பிசிசிஐ
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஜிதேஷ் சர்மா, 7) ஷிவம் துபே / ரிங்கு சிங், 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்ரவர்த்தி, 11) குல்தீப் யாதவ் / ஹர்ஷித் ராணா.