இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 27000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் குவித்து அசத்தி வருகிறார். கடந்த 15 வருடங்களாக இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அத்துடன் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் இப்போதும் இந்திய அணியில் வேகமாக ஓடக்கூடிய வீரராக அறியப்படுகிறார்.
இந்நிலையில் விராட் கோலியுடன் சேர்ந்து இந்திய அணிக்காக விளையாடி தருணங்களை அஜிங்க்ய ரஹானே பகிர்ந்துள்ளார். குறிப்பாக 2014 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மறக்க முடியாதது என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் எப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதை விராட் கோலியிடம் கற்றுக் கொண்டதாகவும் ரகானே தெரிவித்துள்ளார்.
கோலி – ரஹானே பார்ட்னர்ஷிப்
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். அவர் தன்னுடைய விளையாட்டுக்கு செல்லும் விதம், பயிற்சி எடுக்கும் விதம், ஃபிட்னஸ், உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டேன். அவருடன் இணைந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன். நாங்கள் சேர்ந்து விளையாடும் போது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம்”
“நாங்கள் இந்தியாவுக்காக சேர்ந்து சில மகத்தான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2014 தொடரில் அவருடன் சேர்ந்து சுமார் 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எனக்கு மிகவும் பிடித்தது” என்று கூறினார். முன்னதாக 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியிலேயே இந்தியா 36க்கு ஆல் அவுட்டாகி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.
சிறந்த கேப்டன் ரஹானே:
அப்போது விராட் கோலியும் நாடு திரும்பியதால் இந்தியா ஒய்ட்வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே இந்தியாவை அபாரமாக வழிநடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெறும் முக்கிய பங்காற்றினார். இது போக 2023 ரஞ்சி கோப்பை, 2024 இராணி கோப்பையையும் அவர் மும்பை அணிக்காக வென்றார்.
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவுக்கு மும்பை வைத்த செக்.. ரோஹித் சர்மாவிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ
அப்படி சிறப்பாக அணியை வழி நடத்துவது பற்றி ரஹானே மேலும் பேசியது பின்வருமாறு. “வெற்றியில் ரகசியம் கிடையாது. அனைத்து வீரர்களும் சமம் என்பது முக்கியம். கேப்டனாக நீங்கள் அவர்களுக்கு சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு வீரர்களுக்குள்ளும் சொந்த வழியில் மேட்ச் வின்னர்கள் இருப்பார்கள். அதே போல பெஞ்சில் இருப்பவர்களும் களத்தில் கேப்டன் சிந்திக்காத ஐடியாக்களை கொடுக்க முடியும்” என்று கூறினார்.



