ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவில் 57வது போட்டி நடைபெற்றது. அதில் சிஎஸ்கே அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்ற கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 90% இழந்துள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர்.
சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய சென்னைக்கு உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 31 (11) ரன்கள் விளாசினார். ஆனால் ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 60/5 என சரிந்த சென்னை மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கொல்கத்தா தோல்வி:
அப்போது அதிரடியாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ் 11வது ஓவரில் வைபவ் அராரோவுக்கு எதிராக 30 ரன்கள் விளாசி மொத்தம் 52 (25) ரன்களை குவித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அதை வீணடிக்காமல் சிவம் துபே 45*, தோனி 17*, கம்போஜ் 4* ரன்களை அடித்து கடைசி ஓவரில் சென்னைக்கு 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் தேவால்ட் ப்ரேவிஸ் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்தது தோல்விக்கு காரணமில்லை என்று கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியுள்ளார். மாறாக பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 15 ரன்கள் எடுக்காததே தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தோல்வியை சந்தித்த அணியாக இருப்பது மிகவும் கடினமான விஷயம்”
ரஹானே ஏமாற்றம்:
“நாங்கள் 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். இந்த பிட்ச்சில் 185 – 190 ரன்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இது சிறந்த போட்டியாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்கள் (ப்ரேவிஸ் 30 ரன்கள் அடித்தது) நடப்பது சகஜமாகும். உண்மையில் சிஎஸ்கே அணி சிறப்பாக பேட்டிங் செய்து அவர்களுடைய வாய்ப்பை எடுத்தனர்”
இதையும் படிங்க: ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. அதைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.. கொல்கத்தாவை சாய்க்க இதை செஞ்சேன்.. ப்ரேவிஸ் பேட்டி
“குறிப்பாக துபே – ப்ரேவிஸ் தங்களுடைய வாய்ப்பை எடுத்து போராடி விளையாடியது சிஎஸ்கே அணிக்கு உதவியது. எந்த புகாரும் இல்லை. எங்களுடைய பவுலர்கள் நன்றாக பௌலிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன். இங்கிருந்து நாங்கள் பிளே ஆஃப் செல்லும் கணக்கு மிகவும் எளிது. அதாவது அடுத்த 2 போட்டிகளில் நாங்கள் வெல்ல வேண்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்” என ஏமாற்றத்துடன் கூறினார்.



