மும்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் ஏற்கனவே தொடரை வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 5, சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி மிகவும் போராடி 263 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 171-9 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வெல்லுமா:
வில் எங் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின் 3*, ஜடேஜா 4* விக்கெட்டுகளை எடுத்தனர். தற்போதைய நிலையில் 143 ரன்கள் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்தின் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் எடுத்து இந்தியா சேசிங் செய்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மும்பை பிட்ச் எந்த பக்கமாக சுழல்கிறது என்று தங்களாலேயே கணிக்க முடியவில்லை என நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் படேல் கூறியுள்ளார்.
அதனால் குறைவான இலக்கை வைத்தே இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இலக்கு எதுவாக இருந்தாலும் அதை வைத்து இந்தியாவை கட்டுப்படுத்த நாங்கள் சிறந்த முயற்சியை எடுப்போம். ஆனால் பிட்ச் நாளை எப்படி தொடர்ந்து விளையாடுகிறது என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்”
ரிஷப் பண்ட் ஆட்டம்:
“அது கூர்மையாக திரும்புகிறது. அது சுழல், பவுன்ஸ் ஆகியவற்றில் சமமின்றி இருக்கிறது. ஒரு ஸ்பின்னராக இது தான் எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் விஷயங்களாகும். ஏனெனில் அதில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலாக இருக்கும். சொல்லப்போனால் பந்து இருபுறமும் திரும்புகிறது. எனவே பேட்டிங் செய்வது அங்கே கடினமாக இருக்கும். ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார்”
இதையும் படிங்க: பிரிதிவி ஷா, சுப்மன் கில் பற்றி நான் 2018லயே கணிச்சுது சரியாகிடுச்சு.. இதான் காரணம்.. சைமன் டௌல் பேட்டி
“அவருடைய ஆட்டம் எங்களை கொஞ்சம் பின் தங்க வைத்துள்ளது. இருப்பினும் சரியான இடத்தில் பந்து வீசி சரியான திட்டத்துடன் ஃபீல்டிங் செய்தால் அவருடைய விக்கெட்டையும் எடுக்க முடியும். இந்திய ஸ்பின்னர்களும் நன்றாகவே பந்து வீசினார்கள். அதே போல நாங்களும் நன்றாக வளர்ந்துள்ளோம். எனவே போட்டியின் இந்த சூழ்நிலையில் எந்த திட்டத்தை பயன்படுத்தி வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.



