ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வீரர்கள் ஏலத்திற்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி அனைத்து அணிகளும் ஏலத்திற்கு முன் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி வாங்க முடியும்.
அதே போல 2021இல் நீக்கப்பட்ட அன்கேப்ட் பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி 2025 ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. குறிப்பாக 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற தோனி கடந்த 5 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
நம்பர் ஒன் முக்கியமல்ல:
எனவே அவரை அன்கேப்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டின் விளையாடாத வீரராக கருதி சிஎஸ்கே 4 கோடிக்கு தக்க வைக்க பிசிசிஐ அனுமதித்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் நம்பர் ஒன் அல்லது 2வதாக இருக்க வேண்டுமென்ற ஆசை தோனிக்கு கிடையாது என முன்னாள் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். மாறாக சிஎஸ்கே அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் குறைந்த தொகைக்கு தோனி விளையாட தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே ருதுராஜ், ஜடேஜா, பதிரனாவை ஆகியோருடன் தோனி சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படலாம் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் அவர் பேசியது. “முதலாவதாக எம்எஸ் தோனி கண்டிப்பாக இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் தற்போது அவர் அன்கேப்ட் வீரர்”
4 வீரர்கள்:
“சிஎஸ்கே அணியில் நம்பர் ஒன் அல்லது 2வதாக இருக்க ஆசையில்லை என்பதை அவர் கடந்த பல வருடங்களாக காண்பித்து வருகிறார். எனவே அவருடைய மதிப்பில் எந்த சந்தேகமும் கிடையாது. கேப்டன் ருதுராஜ்க்கு கடந்த வருடம் நன்றாக அமைந்தது. எனவே அவரை நீங்கள் தக்க வைப்பீர்கள். அதே போல ரவீந்திராவையும் விட முடியாது. நான் இங்கே ரச்சினை பற்றி பேசவில்லை ஜடேஜாவை பற்றி பேசுகிறேன்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 : தோனியால் இந்த மாதிரியான 5 வீரர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்கப் போகுது.. ஆகாஷ் சோப்ரா
“இந்த 3 வீரர்களும் அவர்களுக்கு கச்சிதமானவர்கள் என்று நான் கருதுகிறேன். பதிரனாவையும் உங்களால் விட முடியாது. அவரைப் போன்ற வீரர்களை பணத்துக்காக அல்லாமல் ஸ்டைலுக்காக நீங்கள் தக்க வைக்க வேண்டும். இந்த நால்வரையும் தக்க வைத்து எஞ்சிய 2 வீரர்களை சிஎஸ்கே ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கக்கூடும்” என்று கூறினார். முன்னதாக 2022இல் 16 கோடி சம்பளமாக வாங்கிய தோனி அதை 2023, 2024இல் 12 கோடியாக ஏற்கனவே குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



