இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதி வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்புச் சாம்பியனாக இருப்பதால் கோப்பையை தக்க வைத்து 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்து அசத்தியது. மறுபுறம் அடுத்தடுத்த படுதோல்விகளால் அவமானத்தை சந்தித்த ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இருப்பினும் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்துள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே விமர்சனங்களை துவக்கிய ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த போது இந்திய ரசிகர்களின் கிண்டல்களை சந்தித்தது.
அஹமதாபாத் மைதானம்:
அந்த நிலையில் நாக்பூர் மற்றும் டெல்லியை விட இந்தூர் பிட்ச் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி எதிர்பாராத அளவுக்கு தாறுமாறாக சுழன்றது. அதனால் என்ன தான் இந்தியாவில் சுழல் இயற்கையாகவே இருக்கும் என்றாலும் அதற்காக முதல் நாளிலேயே இப்படி சுலழ்வது நியாயமானதல்ல என்று நிறைய இந்திய ரசிகர்கள் முன்னாள் வீரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த நிலையில் இந்தூர் பிட்ச் மோசமாக இருப்பதாக அறிவித்த ஐசிசி 3 கருப்பு புள்ளிகளை அதிரடி தண்டனையாக விதித்தது.

அதனால் அடுத்த 5 வருடத்திற்குள் 5 கருப்பு புள்ளிகளை தொடும் போது இந்தூர் மைதானத்தில் 12 மாதங்கள் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான தடை காத்திருக்கிறது. அதன் காரணமாக பிசிசிஐ பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு தகுதி பெறுவதற்காக 4வது போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப் போவதாக 3வது போட்டியின் துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.
அத்துடன் இது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்களை நாங்கள் தான் அமைக்க சொல்வதாக 3வது போட்டியின் முடிவில் அவர் தெரிவித்தது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தூர் மைதானத்திற்கு ஐசிசியிடம் இருந்து சரியான சவுக்கடி கிடைத்துள்ளதால் அகமதாபாத் மைதானத்தில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு இந்தியாவின் நிர்வாகம் கேட்டுக் கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் தாங்கள் விரும்பும் படி தரமான பிட்ச் அமைக்கப்போவதாக குஜராத் கிரிக்கெட் வாரிய அசோசியேசன் மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி அவர்கள் கூறியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு எந்த செய்தியும் வராததால் எங்களுடைய உள்ளூர் மைதான பராமரிப்பாளர்கள் வழக்கமான பிட்ச் உருவாக்க உள்ளனர். கடைசியாக ஜனவரி மாதம் இங்கு நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் ரயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 508 ரன்கள் குவித்தது. குஜராத் 2 இன்னிங்சில் 200 ரன்கள் மட்டுமே குவித்து இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறையும் அதில் பெரிய மாற்றம் இருக்காது”
இதையும் படிங்க:IND vs AUS : 4வது போட்டிக்கு பட் கமின்ஸ் திரும்புகிறாரா? கேப்டன் யார் – கோச் மெக்டொனால்ட் வெளியிட்ட அறிவிப்பு இதோ
“கடந்த சில நாட்களாக பிசிசிஐ மைதானம் மற்றும் பிட்ச் கமிட்டி எங்களது மைதான பராமரிப்பாளர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் விரும்பும் நல்ல டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் தான் இம்முறை அமைக்க உள்ளோம்” என்று கூறியுள்ளனர். இதனால் 4வது போட்டி வேகம், சுழல், பேட்டிங் உள்ளிட்ட அனைத்திற்கும் சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிட்ச் எப்படி அமைக்க வேண்டும் என்பதை மைதான பராமரிப்பாளர்களிடம் விட்டுவிட்டு வாயை மூடிக் கொண்டு தரமான கிரிக்கெட்டை மட்டும் விளையாடுங்கள் என்று இந்திய அணியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.



