- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ தோல்வி எதிரொலி : கோலி போலவே கேப்டன் ரோஹித்துக்கு பிசிசிஐ வைத்துள்ள செக் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் படுமோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இத்தொடரில் விராட் கோலியை தவிர்த்து பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக கேப்டனாக முன்னின்று தொடக்க வீரராக அதிரடி காட்ட வேண்டிய ரோஹித் சர்மா தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதை விட இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் எதிரணியின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது.

அத்துடன் அழுத்தமான தருணங்களில் இதர கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் களத்திலேயே கோபப்படுவதையும் ரோகித் சர்மா வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இருதரப்பு தொடர்களில் அசத்திய போதிலும் உலகக் கோப்பையை வாங்கி தரவில்லை என்பதற்காக கடந்த வருடம் டி20 கேப்டன்ஷிப் பதிவியிலிருந்து தாமாகவே விலகினார். அதை பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து அவரது ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

ரோஹித்துக்கு செக்:
அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது வேறு கதை. ஆனால் கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் அதிரடியான வெற்றிகளை பதிவு செய்து இந்தியாவை நம்பர் ஒன் அணியாக தரம் உயர்த்தினார். ஆனால் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற அழுத்தமான ஆசிய கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய தவறிய அவர் டி20 உலக கோப்பையையும் கோட்டை விட்டார். மொத்தத்தில் ரோகித் சர்மாவின் வருகையால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதே சமயம் விராட் கோலியாவது 2017 – 2021 வரை தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் இவர் பொறுப்பேற்ற ஒரு வருடத்துக்குள் பெரும்பாலும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்ததால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு கேப்டன்களை பயன்படுத்திய வேண்டிய அவலத்தை இந்தியா சந்தித்தது. இப்படி அனைத்திலும் சொதப்பி வரும் ரோகித் சர்மா மீது அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ அவருக்கு மிகப்பெரிய செக் வைத்துள்ளது. அதாவது விரைவில் 3 வகையான இந்திய அணிக்கும் இங்கிலாந்தை போல வெவ்வேறு கேப்டன்கள் என்ற நடைமுறையை பிசிசிஐ உருவாக்க உள்ளது.

அதன் முதல் படியாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள பிசிசிஐ முதற்கட்டமாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை அதிரடியாக நேற்றிரவு கூண்டோடு நீக்கியுள்ளது. இங்கு விஷயம் என்னவெனில் “ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டுக்கும் தகுதியான புதிய கேப்டன்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்பதே புதிதாக தேர்வாகும் தேர்வு குழுவினர் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கும் என்று நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

இதிலிருந்து விரைவில் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டுக்கு மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக ஏற்கனவே பணிச்சுமையால் பெரும்பாலும் ஓய்வெடுக்கும் அவருக்கு பதில் டெஸ்ட் போட்டிகளில் புதிய கேப்டனும் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இனிமேல் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியாக தெரிய வருகிறது.

அதுவும் 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை வெற்றியை பொறுத்து அமையும். ஒருவேளை அதில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு இளம் கேப்டனை நியமிக்க பிசிசிஐ தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த வருடம் விராட் கோலிக்கு வைத்த செக் போலவே இம்முறை ரோகித் சர்மாவுக்கும் பிசிசிஐ செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by